தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கேயார் அணி வெற்றி

film_electionதமிழ்த் திரைப்பட சங்கத்தின் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தலில் கேயார் தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது.

2013 – 2015-ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இத்தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 73 பேர் போட்டியிட்டனர். கேயார்-எஸ்.தாணு அணிகளுக்கிடையே நேரடிப் போட்டி நிலவியது.

சென்னை, நந்தனம் ஓய்.எம்.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் காலை 9 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் காலை முதல் ஆர்வமாக வாக்களித்தனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரவணன், கருணாஸ், தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், ஆர்.பி.சௌத்ரி, பாக்யராஜ், ராஜ்கிரண், குஷ்பு, தேவயானி, ஏவி.எம். பாலசுப்பிரமணியம், இராம. நாராயணன், மு.க.தமிழரசு, உதயநிதி ஸ்டாலின், ராம்குமார், இயக்குநர்கள் பாலா, அமீர், சேரன், டி.ராஜேந்தர், தங்கர்பச்சான் உள்ளிட்ட பலர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மாலை 4.30 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன், ஜெகதீசன் ஆகியோர் மேற்பார்வையில் இத்தேர்தல் நடந்தது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களில் சங்கத்தின் நிரந்தர அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

நிரந்தர உறுப்பினர்கள் 832 பேரில் 708 பேர் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்டன. 5.30 மணிக்கு மேல் முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியாகின.

இறுதி முடிவுகளின் விவரம்: தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கேயார் 449 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ். தாணு 252 வாக்குகளைப் பெற்றார். 2 இடங்களைக் கொண்ட துணைத் தலைவர் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஷ், பவித்ரன், கதிரேசன், டி.ஜி.தியாகராஜன் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். இதில் சுபாஷ் சந்திரபோஷ் 407 வாக்குகளும், டி.ஜி. தியாகராஜன் 358 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

2 இடங்களைக் கொண்ட செயலாளர் பதவிக்கு ஞானவேல்ராஜா, சிவசக்தி பாண்டியன், டி.சிவா, பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். இதில் ஞானவேல்ராஜா 414 வாக்குகளும், டி.சிவா 284 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். மூன்றாவது அணியின் சார்பில் போட்டியிட்ட சிவசக்தி பாண்டியனுக்கு 209 வாக்குகள் கிடைத்தன.

பொருளாளர் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட புஷ்பா கந்தசாமி வெற்றி வாய்ப்பை இழந்தார்.

21 இடங்களைக் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு அழகன் தமிழ்மணி, விஜயமுரளி, நடிகை தேவயானி, கமீலா நாசர், ஆர்.வி.உதயகுமார் உள்பட 59 பேர் போட்டியிட்டனர். இதில் கேயார் அணியைச் சேர்ந்த 18 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

ராதாரவி, கோவைத்தம்பி, கருணாஸ் உள்ளிட்ட மூன்று பேர் மட்டுமே எஸ்.தாணு அணியில் வெற்றி பெற்றனர்.

 “மகிழ்ச்சியை விட பொறுப்புணர்வே அதிகம்’

 மகிழ்ச்சியை விட பொறுப்புணர்வே அதிகமாகி இருக்கிறது என்று தெரிவித்தார் கேயார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கேயார், சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

சுயநலவாதியாக இருந்திருந்தால் இந்த வெற்றி என்னை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கும். எப்போதும் பொது நலமாக இருப்பதால், இந்த வெற்றி மகிழ்ச்சியை விட பொறுப்புணர்வையே அதிகமாக்கியிருக்கிறது. ஏற்கெனவே இருந்த நிர்வாகத்தின் குளறுபடிகளாலும் தவறுகளாலும் இந்த முடிவு கிடைத்திருக்கிறது. அந்தத் தவறுகள் இனி நிகழாதவாறு சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் தேர்வு செய்யப்பட்டவர்கள் பாடுபடுவார்கள். இனி அந்த அணி இந்த அணி என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல் எல்லோரும் ஒரே அணியாக இருந்து செயல்படுவோம். திரையுலகின் வளர்ச்சிக்கு உண்மையாக உழைப்பேன். வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார் கேயார்.