நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலா?

இராகவன் கருப்பையா- நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலுக்கு வழிவிடுமாறு துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் அண்மைய மாதங்களாக பிரதமர் அன்வாருக்குத் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வரும் போக்கு பல கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல்கலில் தேசிய முன்னணி அமோக வெற்றிகளை பதிவு செய்ததிலிருந்து அனுதினமும் இவ்வாறுதான் அவர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் 16ஆவது பொதுத் தேர்தலை உடனே நடத்துமாறு பொதுமக்கள் கேட்கிறார்கள் என மக்கள் மீது பழியை சுமத்துகிறார். பொது மக்களில் எத்தனை பேர், எப்போது அவரிடம் போய் தேர்தல் வேண்டுமெனக் கேட்டார்கள் என்று தெரியவில்லை. அபத்தமாகத்தான் உள்ளது அவருடைய போக்கு.

உண்மையைச் சொல்லப் போனால் தங்களுடைய சுயநலனுக்காக தேர்தல்களை விரைவுபடுத்தும் அரசியல்வாதிகள் மீது பொது மக்கள் கோபமாக உள்ளனர். இதில் மாற்றுக் கருத்து இல்லை.

நடப்பு அரசாங்கத்தின் தவணை காலம் நிறைவுபெற இன்னும் நீண்ட நாள்கள் இருப்பது ஒருப்புறமிருக்க, தங்களுடைய வரிப்பணம் விரயமாவதையும் மக்கள் விரும்பவில்லை.

ஆனால் அஹ்மட் ஸாஹிட் போன்ற அரசியல்வாதிகள் இவற்றைப் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆகக் கடைசியாக போக்குவரத்து அமைச்சர் எத்தனி லோக் தமது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மீண்டும் அதே பல்லவிதான்.

அமைச்சரவை மாற்றம் எதனையும் செய்ய வேண்டாம், 16ஆவது பொதுத் தேர்தலை நடத்துங்கள் என அன்வாருக்கு அவர் அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிட்டார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக இருந்த போதும் இதே சூழல் நிலவியதை மக்கள் இன்னும் மறந்திருக்கவில்லை. அவர் பிரதமர் பொறுப்பை ஏற்று ஒன்றரை ஆண்டுகள் கூட நிறைவு பெறாத நிலையில், நாடாளுமன்றத்தை கலைக்குமாறு நஜிபும் அஹ்மட் ஸாஹிட்டும் வலுவான நெருக்குதல் கொடுத்தனர்.

தேசிய முன்னணி மீண்டும் அரசாங்கத்தைக் கைப்பற்றினால் தாங்கள் நினைத்த மாதிரியெல்லாம்  நாட்டை ஆட்சி செய்யலாம் என்பதே  அவர்களுடைய அப்போதைய பிரதான நோக்கம் என்பது மக்களுக்கும் தெரியும்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட போதிலும், ஆட்சியைக் கைப்பற்றும் அவர்களுடைய நோக்கம் நிறைவேறவில்லை. அன்வார் தலைமையில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். மற்றவை வரலாறு.ஆக, நாடே தற்பொழுது அம்னோவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதைப்போல நடந்து கொள்கிறார் அஹ்மட் ஸாஹிட். பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் பெரும்பான்மைத் தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றலாம் என அவர் பகல் கனவில் மிதக்கிறார்.

அன்வார் அமைச்சரவை மாற்றம் செய்தால் தனது கட்சிக்கு அரசாங்கத்தில் தற்போது இருக்கும் செல்வாக்கு பாதிக்கப்படக் கூடும் எனும் அச்சம் கூட ஸாஹிட்டை வதைக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருந்து கொண்டே அன்வாரையும் பக்காத்தான் ஹராப்பானையும் எதிரி போல நடத்தும் அம்னோ தலைவர்களின் போக்கை பிரதமர் எப்படி கையாள்வார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுவரையில் அவர் பொறுமையாகத்தான் இருக்கிறார். ஆனால் அவருடைய அடுத்தக்கட்ட நடவடிக்கையான அமைச்சரவை மாற்றம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.