தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் : டெல்லியில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற ரஜினிகாந்த் பேச்சு

rajiniஎன்.டி.டி.வி. தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியானதை கொண்டாடும் வகையில், ஒரு ஆன்லைன் கருத்துக்கணிப்பை அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக நடத்தியது.

இப்போது வாழும் பல்துறை சாதனையாளர்கள் (25 கிரேட்டஸ்ட் குளோபல் லிவிங் லெஜன்ட் இண்டியன்ஸ்) பட்டியலிடப்பட்டு இருந்தனர். இந்த வாக்கெடுப்பின் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், நடிகர் ரஜினிகாந்த் முதலிடத்தை பெற்றார். ஆரம்பத்தில் இருந்தே அவர்தான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இடத்தை சச்சின் தெண்டுல்கர் பிடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் 3–ம் இடமும், ரத்தன் டாடா 4–ம் இடமும், ஷாருக்கான் 5–ம் இடமும், அமிதாப்பச்சன் 9–வது இடமும் பெற்றுள்ளனர்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட ரஜினிகாந்த் உள்ளிட்ட 25 பேருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், ‘சில நேரங்களில் அதிசயங்கள் நிகழும்.

ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் இந்த விருதை பெறுவது அதிசயம்தான். இந்த விருதை எனக்கு தாயாகவும், தந்தையாகவும் திகழும் என் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட்டுக்கும், என் குருநாதர் பாலசந்தருக்கும், தமிழ் மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். இவர்களின் அன்பும், பாசமும் இல்லை என்றால், நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்’ என்று கூறினார்.

விருது பெற்றவர்கள் பட்டியலில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், சி.என்.ஆர்.ராவ், நடிகர் அனில் கபூர், நடிகை வகீதா ரகுமான், ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தி, முகேஷ் அம்பானி, டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.