உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை இந்திய மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே, தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தானமாக பெறும் உறுப்புகளை பாதுகாத்து வைப்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார்.
தற்போது இதில் அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது, “சோமா” என்ற புதிய ரசாயன கலவையை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஹேமந்த் கூறுகையில், கடந்த 20 ஆண்டு ஆராய்ச்சியின் பலனாக 21 ரசாயன கலவைகளை உள்ளடக்கிய புதிய சோமா என்ற திரவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளை சாவு அடைந்த ஒருவரது உறுப்புகளில் இதயம், நுரையீரல் உள்ளிட்டவற்றை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 4 முதல் 6 மணி நேரத்துக்குள், சிறுநீரகத்தை 24 மணி நேரத்துக்குள் பொருத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
அது முடியாத பட்சத்தில் உறுப்புகள் பயனற்றதாகி விடுகின்றன. இந்த பிரச்னையை தீர்க்க புதிய ரசாயன கலவை பயன்படும்.
இதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து நீண்ட தூரம் எடுத்து சென்று உறுப்புகளை மற்றவர்களுக்கு பொருத்துவது எளிது.
பன்றிகளின் உறுப்புகளை புதிய சோமா திரவத்தில் வைத்து பரிசோதித்ததில் வெற்றி கிட்டியுள்ளது, இது விரைவில் பயன்பாட் டுக்கு வர உள்ளது என கூறியுள்ளார்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது, தானமாக பெறப்படும் உறுப்புகளை சில மணி நேரங்களில் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தி விட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் உடல் உறுப்புகள் செயலிழந்து விடும்.
இந்த பிரச்னைக்கு மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்துள்ள புதிய ரசாயன கலவை தீர்வாக அமைந்துள்ளது.