அம்மாவின் கோபம் தீர்ந்திருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அரிதாரம் பூசியிருக்கிறார் வடிவேலு. ஆனால் நடக்கும் சம்பவங்களை எல்லாம் வைத்துப் பார்த்தால், வடிவேலு மீதான அம்மாவின் கோபம் இம்மியளவும் குறையவில்லை என்றே தோன்றுகிறது.
தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை, ஆளும்கட்சியின் டி.வி.க்குக் கொடுப்பதன் மூலம் அம்மாவை குளிர்வித்துவிடலாம் என்று கணக்குப்போட்ட வடிவேலு, தன் எண்ணத்தை தயாரிப்பாளர்களிடம் கூறினாராம். அதன்படியே தயாரிப்பு தரப்பு காய் நகர்த்தியது.
சேனல் நிர்வாகமோ இந்த டீலுக்கு அசைந்து கொடுக்கவில்லையாம்.
அடுத்து தெலுங்கு யுவசக்தி என்ற அமைப்பு சார்பாக ஜெகதீஸ்வர ரெட்டி என்பவர் தெனாலிராமன் படத்தில் தெலுங்கர்களை இழிவு செய்திருப்பதாகவும், எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று தணிக்கைக்குழுவில் மனு கொடுக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்.
எனவே இவரது புகாருக்குப் பின்னால் ஆளும்கட்சியின் உள்குத்து இருக்குமோ என்று தெனாலிராமன் படக்குழுவினருக்கு சந்தேகம் எழுந்தநிலையில்.. நேற்று தெனாலிராமன் படத்தின் இசைவெளியீட்டுவிழா நடைபெற்றது.
வழக்கமாக இதுபோன்ற இசைவெளியீட்டுவிழா நிகழ்ச்சியில் திரைப்படத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அணி திரண்டு வருவார்கள். குறிப்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், ஃபெப்சி ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.
அவர்களை மேடைக்கு அழைத்து கௌரவிக்கவில்லை என்றால் கோபப்படுவார்கள். தெனாலிராமன் இசைவெளியீட்டு விழாவிலோ திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களோ, திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ ஒருவர் கூட வரவில்லை. எனவே தெனாலிராமன் இசையை அப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் வெளியிட, இசையமைப்பாளர் இமான் பெற்றுக் கொண்டார்.