அஜந்தா கலைக்கூடம் என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘திருடு போகாத மனசு’. ஒரு கிராமிய கலைஞன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வருகிறான். பிறகு அதில் எழும் பிரச்சினைகளையும் சந்திக்கிறான். இதோடு சொந்த பிரச்சினையும் சேர்ந்து விடுகிறது. இதிலிருந்து விடுபட்டு சினிமாவில் வெற்றி பெற்றானா? என்பதே படத்தின் கதை.
இப்படத்தில் முழுக்க முழுக்க கிராமியக் கலைஞர்களான செந்தில் கணேஷ், சாய் ஐஸ்வர்யா ஆகியோர் கதாநாயகன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் சத்யா, ராஜேஷ், ராஜலட்சுமி, கனகாமணி, ஆறுமுகம், தேன்மொழி போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.
இப்படத்தை செல்ல.தங்கையா என்பவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார். இவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஸ்வநாத் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் போன்ற கதாநாயகர்கள் சொந்தக் குரலில் பாடியுள்ளனர். அதே வரிசையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தையும் கதாநாயகனே பாடியுள்ளார். பாடல்கள் மண் வாசனை மாறாமல் கிராமியப் பாடல்களுக்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற இடங்களிலேயே நடைபெற்று முடிவடைந்தது. இம்மாதம் வெளிவருகிறது.