‘லிங்கா’ தெலுங்கு டப்பிங் உரிமை 30 கோடி…!

lingaAரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ள ‘லிங்கா’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்குத் தயாராக உள்ளார்களாம்.

இது சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனத் தரப்பிலிருந்து கசிந்துள்ள செய்தியில் பல தயாரிப்பாளர்கள் ‘லிங்கா’ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்க போட்டி போடுகிறார்களாம். பொதுவாகவே, ரஜினி நடிக்கும் படம் என்றால் தெலுங்கிலும் நல்ல வியாபாரம் நடக்கும். அவருடைய படம் வெளிவந்து சில வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த அளவுக்கு படத்துக்கு ‘டிமாண்ட்’ ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

அது மட்டுமல்ல படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் வேறு ரஜினியுடன் நடிப்பதால் படத்தின் மதிப்பு அதிகமாகவே உள்ளது. படம் ஆரம்பமான நாள் முதல் படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது. மைசூரில் ஆரம்பமான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

ஒரு டப்பிங் படத்திற்கு 30 கோடி ரூபாய் அளவில் விலை பேசப்பட்டு வருகிறது என்பது தெலுங்குத் திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளதாம். எந்த ஒரு படத்திற்கும் இல்லாத விலை இந்த படத்திற்காக பேசப்படுவது நேரடியாக தெலுங்குப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களையும் யோசிக்க வைத்துள்ளது.

ரஜினிகாந்திற்கு கடந்த சில வருடங்களாகவே இந்திய அளவில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி அவரைச் சந்தித்துப் பேசியது, சமீபத்திய அவரது ட்விட்டர் அறிமுகம், ‘கோச்சடையான்’ திரைப்படம் என கடந்த சில மாதங்களாக மீடியாக்களில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறார்.

தெலுங்கு டப்பிங்கே இவ்வளவு விலை என்றால் தமிழில் ஏரியா விற்பனை எப்படி இருக்கும் ?