‘காவியத் தலைவன்’ தாமதம்…ஏ.ஆர். ரகுமான் காரணமா….?

ar_rahman-621x414-350x233‘அரவான்’ படத்திற்குப் பிறகு வசந்த பாலன் இயக்கி வரும் படம் ‘காவியத் தலைவன்’. பல மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் மெதுவாகவே வளர்ந்து வந்தது. சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

சுதந்திரக் காலத்திற்கு முந்தைய கதையாக இருப்பதாலும், பல சவாலான காட்சிகள் இருப்பதாலும் படத்தின் படப்பிடிப்பு தாமதமானாலும், ஏ.ஆர்.ரகுமானும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

படம் ஆரம்பமான நேரத்தில் ஒரு சில பாடல்களைக் கொடுத்த ஏ.ஆர். ரகுமான் அதன் பின் ஒவ்வொரு பாடலையும் இசையமைத்துக் கொடுப்பதற்கு மிகவும் நேரம் எடுத்துக் கொண்டாராம்.

படத்தை எப்படியாவது கோடை விடுமுறையில் வெளியிட்டு விடலாம் என்று நினைத்த தயாரிப்பு நிறுவனமும், இயக்குனரும் ரொம்பவே ஏமாந்து போய்விட்டார்களாம். ஒரு பாடலைக் கொடுப்பதற்கே ஏ.ஆர். ரகுமான் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

மற்ற புது இசையமைப்பாளர்களாக இருந்தால் விரட்டி கேட்டு விடலாம், ரகுமானாயிற்றே அப்படியெல்லாம் கேட்க முடியாது. அதனால் அவர் தரும் பொறுமையாகக் காத்திருந்து படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

படத்திற்காக அவர் தர வேண்டிய கடைசிப் பாடலை தர மட்டும் மூன்று மாத காலம் எடுத்துக் கொண்டாராம். அதன் பின் இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர். ரகுமான் தமிழில் வருடத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறார். அதிலும் சிறிய படங்களுக்கு அவர் இசையமைப்பதேயில்லை என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே இருந்து வருகிறது.

ரஜினிகாந்த் போன்ற நடிர்களுக்கும், ஷங்கர் , மணிரத்னம் போன்ற மிகப் பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைக்கிறார் என மற்ற இயக்குனர்களே குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால், ரகுமான் இதற்கெல்லாம் பதிலளிப்பதேயில்லை.

தற்போது ‘காவியத் தலைவன்’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. விரைவில் படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமா நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.