மஞ்சப்பை திருட்டு சி.டி. விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை புகார் செய்தனர்.
அந்த சங்கத்தின் தலைவர் இயக்குநர் விக்கிரமன், பொதுச் செயலர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜை சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
அண்மையில் வெளிவந்த மஞ்சப்பை திரைப்படத்தின், திருட்டு சி.டி. சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. திருட்டு சி.டி.க்களினால் திரையரங்கு வசூலில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல தயாரிப்பாளருக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே திருட்டு சி.டி.யை தயாரித்து விற்கும் நபர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மஞ்சப்பை திரைப்படத்தின் இயக்குநர் என்.ராகவன் என்ற நவீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மஞ்சப்பை திரைப்படம் கடந்த 6-ம் தேதி வெளிவந்தது. அன்றைய தினமே அந்த திரைப்படத்தின் திருட்டு சி.டி.யும் சென்னையில் கிடைக்கத் தொடங்கிவிட்டது. இதில் ஒரு திருட்டு சி.டி.யை கைப்பற்றி நாங்கள் ஆய்வு செய்ததில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் மஞ்சப்பை திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்திருப்பது. இது தொடர்பாக அந்த திரையரங்கு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருட்டு சி.டி.யால் திரைப்பட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, திரைப்படத் தொழிóலும் நஷ்டம் அடைந்து வருகிறது. எனவே திருட்டு சி.டி. தயாரித்து விற்பனை செய்பவர்கள் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.