ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற அஞ்சான்!

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் படம் ‘அஞ்சான்’.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இருவரும் இணையும் முதல் படம் இது. மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இரட்டை வேடங்களில் சூர்யா நடித்திருப்பது சிறப்பு செய்தி. ராஜு பாய் எனும் நெகடிவ் ரோலில் சூர்யாவின் நடிப்பு பலரால் பேசப்படும் என தெரிகிறது. அஞ்சான் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாய் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி இரவு வெளியிடப்பட்ட ‘அஞ்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை மூன்று நாட்களில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இதுவரை வெளிவந்த சூர்யா படங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் அஞ்சான் பட டீஸை பார்த்தவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகமாம். அதோடு கடந்த மூன்று தினங்களாக ‘யு-டியூப்’பின் ‘இந்தியாவின் தற்போதைய அதிகம் பாப்புலரான வீடியோ’வாகவும் ‘அஞ்சான்’ ஃபர்ஸ்ட் லுக் டீஸரே தொடர்ந்து இருந்து வருகிறதாம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.