இப்போது தமிழ் சினிமாவில் திகில் பட சீசன். முனி பட வரிசையில் இருந்து இந்த சீசன் தொடங்கினாலும் பீட்சாவுக்கு பிறகுதான் சூடு பிடித்தது. அந்தக் காலத்தில் வீணை எஸ்.பாலச்சந்தர் பொம்மை என்ற திகில் படத்தை எடுத்தார். அதன் பிறகு அவ்வப்போது திகில் படங்கள் வரும். ஆனால் தயாராகும் படங்களில் 75 சதவிகிதம் திகில் படங்களாக இருப்பது தமிழ் சினிமா கண்டிராத ஆச்சர்யம்.
பெருகும் திகில்
சமீபத்தில் வெளியான யாமிருக்க பயமே, அரண்மனை படங்களின் வெற்றி திகிலை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. இப்போது எந்த சினிமா இயக்குனர் பேட்டி கொடுத்தாலும் “இந்த படம் ஹாரர் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர். அமானுஷ்ய சக்தி” என்று தவறாமல் சொல்கிறார்கள்.
காஞ்சனாவுக்கு பிறகு ராகவா லாரன்ஸ் கங்கா என்ற திகில் படத்தை எடுத்து வருகிறார். இது தவிர அம்புலி டீம் எடுக்கும் ஆ, ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் டார்லிங், சிபிராஜ் நடிக்கும் நாய்கள் ஜாக்கிரதை, சேர்ந்து போலாமா, திருட்டு விசிடி, தொட்டால் தொடரும், ஜீரோ, டெய்சி, பூவிழி, மாமரத்துகிளியே, இப்படி தயாரிப்பில் இருக்கும் திகில் படங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
காரணம் என்ன?
அரண்மணை, முனி போன்ற பெரிய பட்ஜெட் படங்களை தவிர்த்து விட்டு பார்த்தால்… சிறு முதலீட்டில் ஒரு திகில் படத்தை எடுத்து விடலாம். ஒரு பாழடைந்த பங்களாவும் ஒரு டிஜிட்டல் கேமராவும், நான்கு நடிகர்களும் இருந்தால் திகில் படத்தை எடுத்து விடலாம். அதன் பிறகு சவுண்ட் எபெக்ட்டும், எடிட்டிங்கும் செய்தால் போதும்.
திகில் படங்களில் இரண்டு வகை ஒன்று பாழடைந்த பங்களாவில் எடுப்பது. அல்லது காட்டுக்குள் எடுப்பது. அடர்ந்த காட்டுக்குள் சில பேர் இளம் ஜோடிகளாக சுற்றுலா செல்வார்கள். அவர்களை ஒரு அமானுஷ்ய சக்தி, அல்லது பேய், அல்லது ஒரு சைக்கோ இவற்றில் ஏதோ ஒன்று அவர்களில் ஒவ்வொருவராக கொல்லும் கடைசியாக ஹீரோ, ஹீரோயின் மட்டும் தப்பித்து வருவார்கள்.
ஒரு பாழைடைந்த வீட்டை ஒருவர் விலைக்கு வாங்கி அந்த வீட்டுக்கு குடும்பத்துடன் குடிபோவார். அந்த வீட்டுக்குள் இருக்கும் பேய் அவர்களை துன்புறுத்தும், அவர்களை காப்பாற்ற ஒரு மனோதத்துவ நிபுணர், அல்லது மந்திரவாதி வருவார். இதே மாதிரி கதைகளில் 100 படத்துக்கு மேல் வந்திருக்கும். இப்போது 100 படத்துக்கு மேல் தயாரிப்பிலும் இருக்கும்.
திகில் படத்தை சரியாக திட்டமிட்டு எடுத்தால் ஒரு மாதத்திற்குள் எடுத்து விடலாம். 50 லட்சத்துக்குள் படத்தை முடித்து விடலாம். இதனால் இயக்குனராக விரும்பும் துணை இயக்குனர்கள் கையில் ஒரு திகில் ஸ்கிரிப்ட் கட்டாயம் இருக்கும். தன் கனவு கதைக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் கடைசி சரக்காக இவர்கள் இறக்குவது திகில் கதைகளைத்தான்.
இப்போது மலேசியா, லண்டன், அமெரிக்கா அரபு நாடுகளில் வசிக்கும் தமிழ் இளைஞர்களுக்கு சினிமா ஆசை வந்திருக்கிறது. அவர்கள் நான்கைந்து பேர் கூட்டாக சேர்ந்து பணம் போட்டு அவர்கள் வசிக்கும் நாட்டிலேயே ஒரு படத்தை எடுத்து முடித்து விட்டு ரிலீசுக்கு தமிழ் நாட்டுக்கு வந்து விடுகிறார்கள். அந்தப் படங்களும் திகில் படங்களாகத்தான் இருக்கிறது. காரணம் அதை தயாரிப்பதுதான் அவர்களுக்கும் எளிது.
குறைந்த உழைப்பு, குறைந்த முதலீடு, குறைந்த பட்ச கியாரண்டி இதற்காத்தான் எல்லோரும் திகில் படங்களை கையில் எடுக்கிறார்கள். அதே குறைந்த உழைப்பு, குறைந்த முதலீட்டில் நல்ல கதை அம்சமுள்ள படங்களை எடுக்க முடியும். ஆனால் அதற்கு தேவை சரியான திட்டமிடல், அழுத்தமான கதை. சினிமாவை நன்றாக புரிந்து வைத்திருக்கிற திறமை. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கன்னட படமான லூசியா 80 லட்சத்தில் எடுக்கப்பட்டதுதான்.