மலையாளத் திரையுலகம் கடந்த சில வாரங்களாகவே கடுமையான சோதனையை சந்தித்து வருவதாகத் தெரிவிக்கிறார்கள். தொடர்ந்து மற்ற மொழிகளிலிருந்து வெளியாகும் படங்கள் கேரளாவில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்துக் கொள்வதால் நேரடி மலையாளப் படங்கள் வெளியாவது சிக்கலாக உள்ளதாம்.
தமிழிலிருந்து ‘கத்தி’, ஹிந்தியிலிருந்து ‘ஹேப்பி நியூ இயர்’ ஆகிய படங்கள் கடந்த வாரம் முதல் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாக கேரள ரசிகர்களின் வரவேற்புடன் இரண்டாவது வாரத்திலும் அடியெடுத்து வைத்துள்ளது.குறிப்பாக ‘கத்தி’ திரைப்படத்தின் வசூல் இதுவரை வெளியான நேரடி மலையாளப் படங்களையே மிஞ்சி விடும் என்கிறார்கள்.
படத்தின் வசூல் மட்டும் அவர்களை கவலையடைச் செய்யவில்லையாம். ஒரு தமிழ் நடிகருக்கு கேரளாவில் இந்த அளவிற்கு வரவேற்பு எப்படி ஏற்பட்டது என்பதை ஆச்சரியத்துடன் பேசி வருகிறார்களாம்.
‘கத்தி’ படம் வெளியான தியேட்டர்களில் கட் அவுட்டுகள், பிரம்மாண்ட போஸ்டர்கள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லாலுக்கு இணையான பேரும் புகழும் எப்படி வந்தது என்பதுதான் பேச்சாக இருக்கிறதாம். ‘கத்தி’ படத்தின் கதை கேரள ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள்.
‘கத்தி’ கொண்டாட்டத்தில் ஒரு ரசிகர் மரணடைந்ததும், அதற்கு கேரளாவில் உள்ள மற்ற ரசிகர்களும், விஜய்யும் நிதி உதவி வழங்கியிருப்பதும் கூட அவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது என்கிறார்கள். விஜய்க்குக் கிடைத்துள்ள இந்த வரவேற்பு சில மலையாள நடிகர்களுக்கு எரிச்சலைக் கூட ஏற்படுத்தியிருக்கும் என்கிறார்கள்.
இனி வரும் காலங்களில் தமிழ்ப் படங்கள் வெளியாகும் அதே நாட்களில் கேரளாவிலும் வெளியாவதை மலையாளத் திரையுலகினில் தடுத்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். அடுத்து ‘ஐ, லிங்கா, உத்தம வில்லன்’ போன்ற படங்களின் வருகை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற அச்சமே இதற்குக் காரணமாம்…