சிம்பொனி இசைக்காக ஜெர்மனி செல்லும் ஜி.வி.பிரகாஷ்

gvprakasjதற்போது உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஜி.வி.பிரகாஷ். இவருடைய இசையில் பல பாடல்கள் வெற்றியடைந்துள்ளது. இசை மட்டுமல்லாமல் தற்போது திரையில் முகம் காட்டத் தொடங்கியிருக்கும் அவர், ‘டார்லிங்’, ‘பென்சில்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்புத் துறையில் அவர் சிரத்தையுடன் மேற்கொள்ளும் முயற்சிகள் அவரை கைதேர்ந்த நடிகராக உருவாக்கி வருகிறது. இனி அவர் நடிகராக மட்டுமே பயணம் மேற்கொள்வார், இசைத் துறையில் கவனம் செலுத்த மாட்டார் என போலி ஆரூடங்களும் உலா வந்தன.

ஆனால், ஜி.வி.பிரகாஷ் சிம்பொனி இசைக்காக ஜெர்மனி செல்ல இருப்பது அவர் இசை அமைப்பாளராக மென் மேலும் உயர இருப்பதை மெய்ப்பிக்கிறது.

இதைப்பற்றி ஜி.வி. கூறும்போது, ‘சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஒரு நுகர்பொருளின் விளம்பரத்துக்காக நான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளேன். உலக அரங்கில் சோபிக்கும் சில இசை அமைப்பாளர்களுடன் என்னை ஒப்பிட்டு, எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி.

ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கார்ட் என்னும் நகரத்தில் மேற்கொள்ள இருக்கும் இசை பதிவுக்காக நான் விரைவில் செல்ல உள்ளேன். இசை உலகில் பிரசித்தி பெற்றவர்கள் பலர் ஜெர்மனியில் தோன்றி உள்ளனர்.

இதில் மிக முதன்மையானவர் எனக் கருதப்படும் கோன்ராத் பௌமன் அவர்களின் இசை காற்றில் மிதக்கும் ஜெர்மனி நாட்டில் என்னுடைய இசையும் கலக்கும் என்பதே எனக்கு பெருமை’ என்றார்.