“லிங்கா’ கதை விவகாரம்: எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த சதி: ரஜினிகாந்த்

“”லிங்கா’ திரைப்படத்துக்கு கதையைத் திருடியதாகக் கூறி எனது பெயர்- புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

“முல்லைவனம் 999′ என்ற தனது கதையைத் திருடி “லிங்கா’ திரைப்படத்தை தயாரித் துள்ளதாக மதுரையைச் சேர்ந்த தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் ரவிரத்தினம் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்து வருகிறார்.

இவ்வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் பதில் மனுத்தாக்கல் செய்தார். அதன் விவரம்:

“லிங்கா’ திரைப்படம் தொடர்பாக மனுதாரர் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறேன். “முல்லைவனம் 999′ என்ற பெயரிலான திரைப்பட முன்னோட்ட காட்சியை நான் பார்க்கவில்லை. மனுதாரரையும் நான் பார்த்ததில்லை.

முல்லைப்பெரியாறு அணை, பென்னிகுவிக் குறித்து நிறைய கதைகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இதற்கு மனுதாரர் மட்டும் உரிமை கோர முடியாது. திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ஒருவரது கதை திருடப்பட்டுள்ளது என்றால் அந்த கதையில் வரும் 13 காட்சிகள் சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

அப்போது தான் கதை திருட்டு என்ற முடிவுக்கு வர முடியும். “லிங்கா’ திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், படத்தின் கதை தன்னுடையதுதான் என மனுதாரர் எப்படி முடிவு செய்தார் என்பதற்கு ஆதாரம் கிடையாது.

“லிங்கா’ கதை குறித்து வார இதழில் வெளியான தகவல் அடிப்படையில் மனுதாரர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. அந்தக் கட்டுரையில் “லிங்கா’ படக்குழுவினர் தகவல் அளிக்கவில்லை.

எனவே மனுதாரரின் குற்றச்சாட்டு கற்பனையானது. “லிங்கா’ திரைப்படம் பலரது கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. மனுதாரரது கோரிக்கையை ஏற்றால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். நான் விநியோகஸ்தர் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். படத்தில் நடித்ததைத் தவிர வேறு எதிலும் எனக்குத் தொடர்பில்லை. தேவையில்லாமல் இந்த வழக்கில் என்னை இழுத்துள்ளார்.

இதற்கு இழப்பீடு கோரும் உரிமை உள்ளது. ஆதாரமின்றி குற்றச்சாட்டுகள் கூறியிருப்பதால் மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று அதில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் டி.என்.வெங்கடேஷ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மனுதாரர் சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இம்மனுக்களைப் பதிவு செய்த நீதிபதி எம்.வேணுகோபால், மனுதாரரின் புகார் தொடர்பான நடவடிக்கை குறித்து பதிலளிக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டார். நவம்பர் 24 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. -http://www.dinamani.com