“லிங்கா’ வுக்கு தடையில்லை: மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் “லிங்கா’ திரைப்படத்துக்குத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தனது திரைப்படத்தின் கதையைத் திருடி “லிங்கா’ படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக, மதுரை சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்த தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் கே.ஆர்.ரவிரத்தினம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

“முல்லைவனம் 999′ என்ற திரைப்படத்தின் கதையை “யூ டியூப்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாகவும், அந்தக் கதை “லிங்கா’ என்ற திரைப்படத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரிக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும், காவல் துறை சார்பில் மதுரை மாநகரக் காவல் ஆணையரும் பதில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த நீதிபதி எம்.வேணுகோபால் பிறப்பித்த உத்தரவு: மனு மீதான உண்மை, சந்தர்ப்ப சூழ்நிலையைப் பார்க்கும்போது மனுதாரரின் கோரிக்கை முற்றிலும் தனிப்பட்ட விவகாரம் சம்பந்தப்பட்டது. ஆகவே, இந்த நீதிமன்றத்தால் மேற்படி மனுவை விசாரிக்க முடியாது. அரசியல் அமைப்புச் சட்டம் 226-ன் கீழ் இந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோர முடியாது.

மனுதாரர், தனது கதையைத் திருடி, “லிங்கா’ படமாகத் தயாரித்துள்ளனர் என மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு சிவில் நீதிமன்றத்தில் தான் உரிய பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.

-http://www.dinamani.com