“லிங்கா’ திரைப்பட கதை விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு

ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா திரைப்படத்துக்கு தடை கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த ரவிரத்தினம் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு, நான் தயாரித்து வரும் “முல்லை வனம் 999′ என்ற படத்தின் கதையைத் திருடி, லிங்கா படத்தை தயாரித்து வருகின்றனர். எனவே, லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்குமாறும், லிங்கா படக் குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறும் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். மனுதாரரின் கோரிக்கை பதிப்புரிமைச் சட்டம் தொடர்பானது என்பதால், உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில், திரைப்படத்தின் கதை, திரைக்கதையை பொன்குமரன் எழுதி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில், லிங்கா திரைப்படத்தின் கதையை பொன்குமரன் எழுதி உள்ளார் என்றும், படத்தின் திரைக்கதையை தான் எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த முரண்பாடுகளை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு, திங்கள்கிழமை (டிச.8) விசாரணைக்கு வருகிறது. -http://www.dinamani.com