ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான்

திரையுலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் ரஜினிகாந்த் நடித்த “கோச்சடையான்’, ஹாலிவுட் திரைப்படங்களான “மில்லியன் டாலர் ஆர்ம்’, “தி ஹண்ட்ரட் புட் ஜர்னி’ ஆகிய 3 படங்களில் இசையமைத்ததற்காக அந்த விருதுக்கான போட்டியில் அவர் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

ஹாலிவுட் திரைப்படமான “ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 2009ஆம் ஆண்டு பெற்றார். அதைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு “127 ஹவர்ஸ்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்துக்காக 2 பிரிவுகளின் கீழ் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

ஆஸ்கர் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்கள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சலீஸ் நகரில் அறிவிக்கப்படும். அதன்பிறகு அந்த விருதுகள், பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வழங்கப்படும்.

இதையொட்டி, ஆஸ்கர் விருது பெறுவதற்காக இசைத்துறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 114 பேரின் பட்டியலை அகாதெமி விருது அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ஏ.ஆர். ரஹ்மான் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதேபோல், பிரபல பாடகர் சோனு நிகாம், தாள வாத்தியக் கலைஞர் விக்ரம் கோஷ் ஆகியோரும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் உள்ளனர்.

-http://www.dinamani.com