மீண்டும் எழுந்து வாருங்கள்! பாலசந்தர் உடல் நிலை; கமல் உருக்கம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் கே.பாலசந்தர் மீண்டும் எழுந்து வருவார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்திலிருந்து ஊடகங்களுக்கு இ-மெயில் மூலம் குரல் பதிவுச் செய்தி அனுப்பியிருக்கிறார்.

இங்கே லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் “உத்தம வில்லன்’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, கே.பி.யின் உடல் நிலை மோசமாக உள்ளது என்கிற செய்தி வந்தடைந்தது. அவரது உதவியாளர் மோகன் மூலம் கே.பி.யிடமே பேசினேன். “”ஹலோ… கமல்…” என்று குரல் மெலிதாகவே வந்தது.

“”கமல், விரைவில் படத்தை முடித்துக் காட்டு; பார்த்து விட்டு போகிறேன்” என்று இரட்டை அர்த்தம் எதுவும் இல்லாமல் ஒரே அர்த்தத்தில் சொன்னார் கே.பி. கிட்டத்தட்ட 43 வருடங்களாகக் கேட்டுப் பழகிய குரல். எத்தனை பழுது பட்டாலும் அடையாளம் புரிந்தது எனக்கு. “”பட வேலைகள் போய்க் கொண்டிருக்கின்றன. முடித்து விட்டு வருகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்” என்றேன். அதற்கு பிறகு நீண்ட நேரம் கிட்டத்தட்ட ஒன்றரை நிமிஷங்கள் அவர் பேசியது எதுவும் எனக்குப் புரியவில்லை. ஆனால், புரிந்தது போல் அவர் பேச்சுக்கிடையில் சரியான தருணம் பார்த்து இடைவெளியில் “சரி, ஆகட்டும்’ என்று தோராயமாகச் சொல்லி வைத்தேன்.

அதற்கு அடுத்த நாளில் கே.பி.யின் மகன் பிரசன்னா பேசினார். 40 வருடங்களுக்கு முன்பு “அபூர்வ ராகங்கள்’ படத்தில் பிரசன்னா என்கிற எனது கதாபாத்திரத்தின் பெயரை விளக்கிய காட்சி மின்னி மறைந்தது. இரண்டு சகோதரர்கள் தன் தந்தையார் கவலைக்கிடமாக இருக்கையில் என்னென்ன பேசுவார்களோ அனைத்தும் பேசினோம்.

நான் வந்து சாதிக்க கூடியது ஒன்றுமில்லை. நான் வாங்கிய டாக்டர் பட்டம் இந்தத் தருணத்தில் உதவாது. சரியாகச் சொன்னால், படிக்காமல் வாங்கிய எந்தப் பட்டமும் எத்தருணத்திலும் உதவாது. வேலையை முடிக்காமல் வருவதை நான் மட்டுமல்ல நான் தொழில் கற்க உதவிய கே.பி.யும் விரும்ப மாட்டார்.

எனது ஆர்வமெல்லாம் முடிந்தால் படத்தை முதலில் அவருக்கு போட்டுக் காட்ட வேண்டும். இரண்டாவது தொலைபேசியில் அந்த ஒன்றைரை நிமிஷங்கள் அவர் என்ன சொல்ல வந்தார் என்பதைக் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு வேளை இவ்விரண்டும் இயலாமல் போனால் அவர் என்னவெல்லாம் சொல்லியிருப்பார் என்று என்னால் ஊகிக்க முடியும். அந்தப் புரிதலை அவரோடு நான் பழகிய 43 வருடங்கள் எனக்கு வழங்கி இருக்கிறது.

நான் விரும்பும் கலையில் நல்ல இடத்தை தேடித் தந்த ஆசானுக்கு என்றும் போல் வணக்கங்கள். மீண்டும் எழுந்து வாருங்கள் ஐயா என அதில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “உத்தம வில்லன்’ படத்தில் கே.பாலசந்தர் திரைப்பட இயக்குநர் பாத்திரமேற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com