அமீர்கான் இன்றைய நடிகர்களுக்கெல்லாம் இளமையை தக்க வைப்பதில் சவால் விடுகிறார். கண்டிப்பாக இந்த படம் இந்த கூட்டணியின் முந்தைய சாதனையான த்ரீ இடியட்ஸை விஞ்சும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இந்த பால்வெளியில் இந்த சூரிய மண்டலத்தைப் போல் பல உள்ளது. அது போல் ஒரு சூரிய மண்டலத்தில் உள்ள ஒரு கிரகத்தில் இருந்து நம் பூமிக்கு வரும் ஏலியன் அமீர்கான்.
ராஜஸ்தானில் விண்கலத்தில் இருந்து இறங்கியதும் அதீதி தேவோ பவ என்னும் இந்திய கொள்கையின் படி அந்த விண்கலத்தை கண்ட்ரோல் செய்யும் ரிமோட்டை ஒரு இந்தியனிடம் பறி கொடுக்கிறார்.
ரிமோட் பறிபோனதால் மீண்டும் தனது கிரகத்திற்கு செல்ல முடியாமல் இங்கேயே ரிமோட்டை தேடியலையும் அமீர்கானுக்கு பெல்ஜியத்தில் பாகிஸ்தான் வாலிபனுடன் காதல் தோல்வியில் சிக்கி டெல்லியில் ரிப்போர்ட்டராக வேலை செய்யும் அனுஷ்கா ஷர்மாவின் நட்பு கிடைக்கிறது.
தனது ரிமோட் இந்தியாவின் பெரும் சாமியார்களில் ஒருவரான சௌரப் சுக்லாவிடம் இருக்கிறது என்பதை அறியும் அமீர்கான் அனுஷ்கா ஷர்மாவின் உதவியுடன் அந்த ரிமோட்டை பெற்று தனது கிரகத்திற்கு திரும்புவதே பிகே படத்தின் கதை.
முதல் காட்சியிலேயே நம்மை படத்துடன் ஒன்ற வைத்து விடுகிறார் இயக்குனர். விண்கலத்தில் இருந்து நிர்வாணமாக இறங்கும் அமீர்கானிடம் டாலர் செயின் வடிவில் இருக்கும் ரிமோட் அறிமுக காட்சியிலேயே பறி போகிறது. அங்கேயே அடுத்தது என்ன என்று யோசிக்க வைத்து இருக்கிறார்கள்.
படம் முழுவதுமே மதத்திற்கும் போலி சாமியார்களுக்கும் சவுக்கடிகள் நீக்கமற நிறைந்திருக்கிறது. கடவுளை மற, மனிதனை நினை என்ற பெரியாரின் வரிகளே படத்தின் சாராம்சம்.
இந்தியில் கவிதை பாடி அறிமுகமாகும் சுஷாந்தை விரும்ப தொடங்கும் அனுஷ்கா, அவர் பாகிஸ்தானி என்று தெரிந்ததும் அவரை விட்டு விலகுவதும் பிறகு காதல் கொள்வதும் பிரமாதமான கேரக்டரைசேசன்.
அதே போல் சுஷாந்தும் அனுஷ்காவும் ஒரு காரணத்தால் பிரிவதும், பிரிவில் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பதும் சுவாரஸ்யத்திற்காக. ஆனால் நான் அந்த ட்விஸ்ட்டை ஆரம்பித்திலேயே கணித்து விட்டேன்.
ஒரு படத்திற்கு சுவாரஸ்யமான காட்சிகள் இரண்டு அல்லது மூன்று தான் இருக்கும். துப்பாக்கியில் அந்த பதினாறு தீவிரவாதிகளை ஒரே நேரத்தில் சுடும் காட்சி, நாயை வைத்து தங்கையை கண்டுபிடிக்கும் காட்சி போல.
இந்த படத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்ய காட்சிகள் இருக்கிறது.
காணாமல் போனவர்கள் பற்றிய பிட்நோட்டீஸ் ரயில்களில் வினியோகிப்பார்கள் அல்லவா. அது போல வினாயகர், சரஸ்வதி போன்ற கடவுள்களை காணவில்லை என்று அமீர்கான் பிட்நோட்டீஸ் வினியோகிப்பது.
எப்போதும் மஞ்சள் ஹெல்மெட் போட்டிருப்பதற்கான விளக்கம்,
கோயில் உண்டியலில் சாவகாசமாக பணத்தை லவட்டுவது, மழை பெய்யும் காலங்களில் எங்கு தங்குவாய் என்ற அனுஷ்காவின் கேள்விக்கு டெமோ காட்ட போலீஸ் ஜீப் முன்னாலேயே ஒன்னுக்கடித்து ஜெயிலுக்கு போவது
என நிறைய இருக்கிறது.
பசிக்கிறது சாப்பாடு வேணும் என தான் வாங்கிய சாமி சிலையிடம் அமீர்கான் வேண்ட ஒரு அம்மா சம்சா வழங்க பிரமித்துப் போய் ரிமோட் வேணும் என வேண்ட, கிடைக்காமல் சிலை கொடுத்தவனிடம் சண்டை போட, அவனோ கோயிலுக்குள் சென்று பிரார்த்தித்தால் கிடைக்கும் என சொல்ல, அங்கும் ரிமோட் கிடைக்காமல் போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணுவது என மனுசன் பின்னுகிறார்.
கோயில் ஏமாற்றியதால் தேங்காய், பூ, பழம் சகிதம் சர்ச்சுக்கு போய் பூஜை செய்வதும், சர்ச்சில் இருப்பவர்கள் விரட்டும் போது, சர்ச்சில் ஒயினை பிரசாதமாக வழங்குகிறார்கள் என்று அறிந்ததும், ரெண்டு ஒயின் பாட்டிலுடன் மசூதிக்கு செல்வது என அதகளம் பண்ணுகிறார் அமீர்.
வெள்ளைப் புடவை கட்டிய பெண்ணிடம் கையைப் பிடித்து விவரம் விசாரிக்க அருகில் இருப்பவர்கள் விதவையிடம் வம்பு பண்ணாதே என்று விரட்ட, சர்ச்சுக்கு வெள்ளை உடையுடன் திருமணத்திற்கு செல்லும் பெண்ணிடம் விதவையா என விசாரிக்க, அவர்களோ கருப்பு உடை அணிந்தவர்கள் தான் விதவைகள் என்று விரட்ட, பர்தா அணிந்த பெண்களிடம் நீங்கள் விதவையா என்று குசலம் விசாரிப்பது என விலா நோக சிரிக்க வைக்கிறார் அமீர்.
மிகச்சிறிய வேடத்தில் சஞ்சய்தத் வந்து காரணமே இல்லாமல் செத்துப் போகிறார்.
மனிதனில் இவன் இந்து, இவன் முஸ்லீம், இவன் கிறிஸ்துவன் என ஸ்டாம்ப்பா குத்தியிருக்கிறது என்று மூட நம்பிக்கைகளுக்கு சவால் விடுகிறார் இயக்குனர்.
மொழி தெரியாவிட்டாலும் பரவாயில்லை. உங்களுக்கு புரியும், படத்தை மட்டும் தவற விடாதீர்கள்.
கண்டிப்பாக தமிழில் ரீமேக் செய்யப்பட வேண்டிய திரைப்படம் இது.
நன்றி – ஆரூர் மூனா
படம் பார்த்தேன் மண்டைக்கு மணி அடித்து விட்டது ,இது ஒரு தமிழ் படமாக இருந்திருந்தால் மனம் திருப்தி அடைந்திருக்…
இந்த படத்தை ……………தெளிவாக இருக்கும் யாரும் 5 நிமிடத்தில் அடைத்துவிடுவார்கள் ஆகவே இதை நம்ம BN கட்சி உறுப்பினார்கள் அனைவரும் பிரதமொரோடு உட்கார்ந்து பார்க்க வேண்டிய படம்