கே பாலச்சந்தர் காலமானார்

தமிழ் திரையுலகில் ‘இயக்குனர் சிகரம்’ என்று புகழப்படும் கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 84.

kbalachandar1

கே பாலச்சந்தர்

 

நூறுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள கே பாலச்சந்தர், கடந்தவாரம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 1960களில் தனது திரைப் பயணத்தை துவக்கிய கே பாலச்சந்தர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்தியாவில் திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது அவருக்கு 2010ம் ஆண்டிலும், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மஸ்ரீ அவருக்கு 1987 ஆம் ஆண்டிலும் வழங்கப்பட்டது.

கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ஒரு வீடு இரு வாசல் மற்றும் ருத்ரவீணா ஆகிய திரைப்படங்கள் அவருக்கு தேசிய விருதுகளை பெற்றுத்தந்தது. அத்தோடு அவரது தயாரப்பில் உருவான திரைப்படமான ரோஜாவும் அவருக்கு ஒரு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இவை தவிர எண்ணற்ற மாநில அரசாங்க திரைத்துறை விருதுகளும், ஏனைய பிரபல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

புகழ் பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் என்று அறியப்படும் இவருக்கு சென்னைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகம் ஆகியவை கௌரவ முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளார்கள்.

திரையுலகத்தில் பிரபலாமாக உள்ள நடிகர் கமல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள இவர், இதுவரை 48 நடிகர்களுக்கும், 42 நடிகைகளுக்கும், 10 தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல் வாய்ப்பை அளித்துள்ளார். ஆசிய அளவில் அதிக ஊதியம் பெரும் நடிகர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவர் என்று அறியப்படும் ரஜினிகாந்த் இவரது இயக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர். அதே போல் இரு ஆஸ்கார் விருதுகளை ஒரே சமயத்தில் குவித்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இவர் தயாரித்த படத்தில் தான் அறிமுகம் செய்யப்படிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

kbalachandar2
ரஜினிகாந்துக்கு ஏற்றத்தைக் கொடுத்தவர் பாலச்சந்தர்

 

இவரது இயக்கத்தில் உருவான படங்கள் வழக்கமான சினிமா பாணியிலிருந்து சற்று வித்தியாசம் பெற்றிருந்தன. நாடகம் போன்ற அமைக்கப்பட்ட காட்சிகள் இவர் படங்களில் அதிக அளவில் காணப்பட்டாலும், முத்திரை பதிக்கும் வசனங்கள் முழுப்படத்திலும் பரவி இருக்கும்.

அழுத்தமான கதையை மட்டும் நம்பியே இவரது படைப்புகள் படைக்கப்பட்டதால், பெரும்பாலும் புகழ் பெற்ற நடிகர்களை இவர் அவரது படங்களில் தேர்வு செய்தது இல்லை. குறிப்பாக இவர் இயக்கிய எந்த படத்திலும் நடிகர் எம்.ஜி.ஆர். நடித்ததில்லை அதேபோல் நடிகர் சிவாஜியும் கூட ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். இவரது ஆரம்பக்கட்டம் தொடங்கி பெரும்பாலான படங்களில் நடிகர் நாகேஷ் மட்டும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தார். அதிலும் பாலச்சந்தர் எழுதிய கதையில் உருவான திரைப்படமான சர்வர் சுந்தரம் தான் நடிகர் நாகேஷை புகழின் உச்சத்திற்கே அழைத்து சென்றது.

நகைச்சுவைக்கான முக்கியத்துவத்தை அளித்த இதே இயக்குனர் பாலச்சந்தர், குடும்பச் சச்சரவுகள், உறவுகளின் உரசல்கள், சமுகப் பிரச்சனைகள் என்று பல்வேறு தரப்பட்ட தனித்துவ கதைகளை துணிச்சலான வகையில் அவர் கையாண்டார்.

துவக்கத்தில் மேடை நாடகங்களுக்கு கதைகள் எழுதியும், அவற்றை இயக்கம் செய்திருந்த கே.பாலச்சந்தர், திரைப்பட இயக்குனராக வெற்றி பின்பும் கூட தொலைக்காட்சி நாடகங்களை இயக்கியுள்ளார். தொலைக்காட்சிகளில் வெளியாகிய அவரது தொடர் நாடகங்கள் கூட தனிமுத்திரை பதித்து அவருக்கு தனி அடையாளம் பெற்றுக் கொடுத்தது. சின்னத்திரைகளில் தற்போது பிரபலாமாக இல்ல நீண்ட நாட்களுக்கு ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர் என்னும் முறையையும் இவர் தான் அறிமுகம் செய்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தனது கலை சேவையை தொடர விரும்பிய அவர், அதன் மூலமாகவும் பலருக்கும் பலவிதமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

கலை உலகில் போற்றப்படுபவர்களை பின்தொடராமல், கலையை, அவர் போற்றிய காரணத்தினால் தான் கலைத்துறை கொண்டாடும் இயக்குனரானார் கே.பாலச்சந்தர். -BBC