சிறு வயதிலேயே தனது தாய், தந்தையை இழந்துவிட்ட நாயகன் சந்திரன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார். இங்கு அவருக்கு நெருங்கிய நண்பராகிறார் வின்சென்ட்.
நாயகன் சந்திரனுடைய அப்பா பார்வையற்றவர். இவர் இறப்பதற்கு முன் சந்திரனிடம், நான் பார்க்காத இந்த உலகை பார்க்க நீ பிறந்திருக்கிறாய். ஆகையால், இந்த உலகை நீ நன்றாக ரசிக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார்.
இதனால், சந்திரன் கிடைத்த பணத்தை சேர்த்து வைக்க நினைக்காமல் இந்த உலகத்தை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறான். இதற்காக 6 மாதம் கடுமையாக உழைத்து, மீதி 6 மாதங்கள் ஊர் சுற்றக் கிளம்பி விடுவான்.
அதன்படி, ஒருநாள் கன்னியாகுமரிக்கு தனது நண்பனுடன் செல்கிறான். போகும்வழியில் இருவரும் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது, ஒரு காதல் ஜோடி இவர்களை கடந்து ஓடிச் செல்கிறது.
ஊரைவிட்டு ஓடிச் செல்லும் அவர்கள் தங்கள் கையில் இருந்த பையை தவறவிடுகிறார்கள். இதை எடுத்துக் கொண்டு நண்பர்கள் இருவரும் அந்த காதல் ஜோடியை பின்தொடர்ந்து அவர்களிடம் ஒப்படைக்கின்றனர்.
காதல் ஜோடியை துரத்தி வருபவர்கள் இதை பார்த்துவிடுகின்றனர். நண்பர்கள் இருவரும்தான் அந்த காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிச்செல்ல உதவியிருக்கிறார்கள் என்று நினைத்து, அவர்களை அடித்து உதைத்து, தங்களது இடத்துக்கு கொண்டு செல்கின்றனர்.
அங்கு சென்றபிறகுதான் தெரிகிறது. ஒடிச் சென்ற பெண் அந்த ஊரின் பண்ணையாரான யோகி தேவராஜின் மகள் என்று. அவரிடம் தாங்கள் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று நண்பர்கள் முறையிடுகிறார்கள். ஆனால், தேவராஜோ இவர்களது பேச்சை கேட்பதாக இல்லை.
ஆகையால், அவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்கும்வரை அங்கேயே ஓரிடத்தில் அடைத்து வைக்கிறார்கள். இந்நிலையில், அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்ணான நாயகி ஆனந்தி, இவர்களிடம் சென்று பண்ணையாரின் மகள் பற்றி விசாரிக்கிறாள்.
அவளைப் பார்த்ததுமே அவள்மீது காதல்வயப்படுகிறார் சந்திரன். பண்ணையார் மகளைப் பற்றி தனக்கு தெரிந்தாற்போல் அவளிடம் காட்டிக் கொள்கிறான். இதையெல்லாம், ஆனந்தி, தான் மறைத்து வைத்திருந்த டேப்ரெக்கார்டரில் பதிவு செய்து பண்ணையாரிடம் கொண்டு சென்று ஒப்படைக்கிறார்.
சந்திரன் வேண்டுமென்றே தங்களிடம் உண்மையை மறைக்கிறான் என்று பண்ணையாரின் ஆட்கள் அவனை மேலும் அடித்து உதைக்கிறார்கள். ஒருகட்டத்தில், சந்திரன் தான் ஆனந்தியை விரும்புவதாகவும், அவள் தன்னிடம் பேசுவதற்காகத்தான் பண்ணையார் மகளைப் பற்றி தெரிந்ததாக கூறியதாக கூறுகிறான்.
ஆனால், அதை பண்ணையாரின் ஆட்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவனை எரித்து கொன்றுவிட துணிகின்றனர். அந்த நேரத்தில் ஊரைவிட்டு ஓடிச்சென்ற பண்ணையாரின் மகள் திரும்பி வந்துவிடுகிறாள்.
அவள் வந்து தான் ஊரைவிட்டு ஓடிச்சென்றதுக்கும், சந்திரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பண்ணையாரிடம் சொன்னபிறகு, சந்திரனை ஊரைவிட்டே சென்றுவிடும்படி கூறி அனுப்பி விடுகின்றனர்.
இதனால், சந்திரன் அந்த ஊரைவிட்டு கன்னியாகுமரிக்கு செல்கிறான். அவன் சென்றபிறகு, அவன் நினைவாகவே இருந்து வருகிறாள் ஆனந்தி. இதையறியும் அவளது பாட்டி, சந்திரன் கன்னியாகுமரிக்குத்தான் சென்றிருக்கிறான்.
அவனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுடனே சேர்ந்து வாழ் என்று செலவுக்கு பணம் கொடுத்து அவளை அனுப்பி வைக்கிறாள்.
சந்திரனை தொடர்புகொள்ள எந்த வழியுமே இல்லாத நிலையிலும், அவனைத் தேடி புறப்படுகிறாள் ஆனந்தி. இறுதியில், அவனைத் தேடிக் கண்டுபிடித்து அவனுடன் சேர்ந்து வாழ்ந்தாளா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
படத்தின் நாயகன் சந்திரனுக்கு ரொம்பவும் யதார்த்தமான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார். இவருக்கு இதுதான் முதல்படம் என்றாலும் நடிப்பில் அது தெரியவில்லை. இவருடைய நண்பராக வரும் வின்சென்டும் நடிப்பில் கலக்கியிருக்கிறார்.
ஆனந்தி, ஒரு கிராமத்து பெண்ணாக நம் மனதில் எளிதாக பதிகிறார். படம் முழுக்க பாவாடை சட்டையில் வலம் வரும் இவர் பார்க்க சிறுபெண்ணாக இருந்தாலும் நடிப்பில் சிகரம் தொட்டிருக்கிறார். இவரிடம் இருக்கும் திறமைகளை நன்றாக வேலை வாங்கி வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பிரபு சாலமன்.
இதுவரையிலான படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த யோகி தேவராஜுக்கு, இப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அதை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார்.
யதார்த்தமான மனிதர்கள், வித்தியாசமான கதைக்களம், ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது ஒரு புதுமை என தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் கொடுப்பதில் பிரபு சாலமனுக்கு நிகர் அவரே. இப்படத்திலும் அந்த வித்தியாசத்தை காணமுடிகிறது.
நாயகனை தேடி செல்லும் பரபரப்பான சூழ்நிலையிலும், ஜமீன் தாத்தாவை வைத்து கதையோடு பயணிக்கும் காமெடியை கொண்டுவந்து கலகலப்பூட்டியிருப்பது சிறப்பு. படத்தின் ஆரம்பத்தில் நாயகனை அறிமுகப்படுத்தும்போது, பின்னணியில் பிரபு சாலமன் பேசும் வசனங்கள் அனைத்தும் எதார்த்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
படத்தின் முதல் பாதி மிகவும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது. ஆனால், பிற்பாதி முழுக்க நாயகி, நாயகனை தேடுவதிலேயே கதை நகர்வதால் சற்று போரடிக்கிறது. இரண்டாம் பாதியில் மட்டும் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுனாமி வரும் காட்சிகளும் அருமை.
டி.இமான்-பிரபு சாலமன் கூட்டணி என்றாலே பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை டி.இமான் இந்த படத்தில் ஓரளவுக்குத்தான் நிறைவேற்றியிருக்கிறார் என்று சொல்ல முடியும். ஒருசில பாடல்களை தவிர, மற்ற பாடல்கள் எல்லாம் சுமார்தான். பின்னணி இசையில் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.
வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் அழகாக படமாக்கியிருக்கிறது. பாடல் காட்சிகளில் பலே சொல்ல வைக்கிறது.
மொத்தத்தில் ‘கயல்’ மயில் போல அழகு.
-http://123tamilcinema.com
அப்பன் ஆசையை நிறைவேற்றாத கதாநாயகன் செத்து இருக்கலாம் ..மண்ணாங்கட்டி காதல் …கயல்,மயில் ..மீண்டும் ஒரு சினீமா உப்புசம.