கே.பாலசந்தர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடருவேன்: நடிகர் கமல்ஹாசன்

  • மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் இல்லத்துக்கு புதன்கிழமை வந்த நடிகர் கமல்ஹாசன், நடிகை கௌதமி.
    மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் இல்லத்துக்கு புதன்கிழமை வந்த நடிகர் கமல்ஹாசன், நடிகை கௌதமி.

மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் விட்டுச் சென்ற பணிகளை, ஒரு மகனின் கடமையாக எடுத்துக் கொண்டு தொடருவேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

“உத்தம வில்லன்’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளுக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு சென்றிருந்த கமல்ஹாசன், இயக்குநர் கே.பாலசந்தரின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்துக்கு புதன்கிழமை சென்று அவரது மனைவி ராஜம், மகன் பிரசன்னா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பாலசந்தரின் மறைவு அனைத்துத் தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. அந்தச் செய்தியால் நானும் மிகவும் பாதிக்கப்பட்டேன். இப்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறேன். வேண்டும் அளவுக்கு அழுது முடித்து விட்டதால், உங்களிடம் இப்போது பேசுகிறேன்.

இன்றைய இளைஞர்கள்கூட வியக்கும் அளவுக்கு படங்களை இயக்கியவர் பாலசந்தர். அவர் இயக்கிய 30 சதவீத படங்களை விமர்சனங்களுக்காக ஒதுக்கி வைத்து விட்டாலும், 70 சதவீத படங்கள் பாராட்டுக்குரியவையாக இருந்துள்ளன. கவிதைக்கு பாரதியைப் போல், இனி சினிமாவுக்கு பாலசந்தரைத்தான் கூற வேண்டும்.

பாலசந்தர் மறைந்து விட்டார். இனிமேல் அவர் கிடையாது என சொல்ல முடியாது. முழு உருவத்தில் அவர் இருக்கிறார். என்னைப் போன்ற பல உருவங்களில் அவருடைய திறமை பளிச்சிட்டுக் கொண்டே இருக்கும்.

ஈடு செய்ய முடியாத இந்த இழப்பை, ஈடு செய்ய நாங்கள் முயற்சிக்கப் போவதில்லை. அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர வேண்டிய கடமையாக, ஒரு மகனின் கடமையாக எடுத்துக் கொண்டு அவரது பணிகளைச் செய்வேன் என்றார் கமல்ஹாசன்.

கமல்ஹாசனுடன் நடிகை கௌதமியும் உடனிருந்தார்.

-http://www.dinamani.com