தமிழ் சினிமா 2014: நகைச்சுவையில் கலக்கிய சந்தானம் – சூரி

santhanam-sooriசினிமாவில் நகைச்சுவைதான் இப்போது பிரதானமாகிவிட்டது. மக்களும் நகைச்சுவை அல்லது சிரிப்பு கலந்த பேய்ப் படங்களைத்தான் விரும்பிப் பார்க்கிறார்கள். காமெடியில் சகாப்தம் படைத்த கவுண்டமணி, வடிவேலு களத்தில் இல்லாத நிலையில், புதுப்புது காமெடியன்கள் நிறையவே வர ஆரம்பித்துள்ளனர். அதுவும் இந்த ஆண்டு அதிகப் படங்கள் வெளியானதால், காமெடி நடிகர்கள் வருகை அதிகமாகவே இருந்தது.

சந்தானம்

ஆனாலும் இந்த ஆண்டும் நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்தவர் சந்தானம்தான். ஹீரோவாக நடிப்பதால் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், நடித்த ஒன்பது படங்களிலும் காமெடியில் குறை வைக்கவில்லை. குறிப்பாக வீரம், அரண்மனை, வானவராயன் வல்லவராயன் படங்களில் கலக்கினார். ரஜினியுடன் நடித்த லிங்காவிலும் அவர் காமெடி நன்றாகவே பேசப்பட்டது. இது கதிர்வேலன் காதல், பிரம்மன் படங்களின் காமெடியும் சோடை போகவில்லை. அவர் ஹீரோ மற்றும் காமெடியனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படமும் விநியோகஸ்தர்களை ஏமாற்றவில்லை.

பரோட்டா சூரி

பரோட்டா சூரிக்கு இது மிக முக்கியமான ஆண்டு. இதுவரை சாதாரண காமெடியனாக இருந்தவர், இன்று முதல் நிலைக்கு வந்திருக்கிறார். 2014-ம் ஆண்டு அவர் நடித்தது 13 படங்கள். குறிப்பாக முன்னணி நடிகர்கள் விஜய்யுடன் ஜில்லாவிலும் சூர்யாவுடன் அஞ்சானிலும் இணைந்தது இந்த ஆண்டுதான். இவர் நடித்த பட்டய கிளப்பணும் பாண்டியா நன்றாகப் போயிருக்க வேண்டிய படம். சரியான நேரத்தில் வெளியாகாததால் எடுபடவில்லை. மான் கராத்தே, ஜீவா, பூஜை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வெள்ளக்கார துரை படங்களில் இவரது நகைச்சு நன்றாக ரசிக்கப்பட்டது.