சென்னை: சி2எச் சேவை மூலம் சினிமாவை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்கிறோம் என்று திரைப்பட இயக்குநர் சேரன் தெரிவித்தார்.
புதிய திரைப்படங்களை தயாரிப்பாளர்களின் அனுமதியுடன் டி.வி.டி.க்களாக மாற்றி அதனை பொதுமக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் சி2எச் என்ற நிறுவனத்தை திரைப்பட இயக்குநர் சேரன் தொடங்கியுள்ளார்.
இந் நிறுவனத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் புதிய திரைப்படங்களின் டி.வி.டி.க்களை விற்பனை செய்ய உள்ளனர்.
இந்த டி.வி.டி.க்களை போலியாக தயாரித்து விற்பனை செய்வதைத் தடுக்க போலீஸார் போதிய ஒத்துழைப்பு வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களைச் சந்தித்து மனு கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் விழுப்புரம் மாவட்ட எஸ்பி விக்கிரமனை இயக்குநர் சேரன் சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதிய திரைப்படங்களை தயாரிப்பாளர்களின் அனுமதியுடன் டி.வி.டி.க்களாக மாற்றி, அதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டத்தை செயல்படுத்த சி2எச் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் ஒரிஜினல் டிவிடிக்கள் ரூ.50-க்கு கிடைக்கும்.
புதிய திரைப்படங்களை டிவிடிக்களாக வெளியிடுவதன் மூலம் திரையரங்குகள் பாதிக்கப்படும் என்று கூறுவதை ஏற்க முடியாது.
இதுகுறித்து நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவிக்கும்போது, கோயில் கட்டினாலும், வீட்டில் சாமி வைத்துக் கொள்வதில்லையா? வீட்டில் சாமி இருக்கிறது என்பதற்காக கோயிலுக்கு போகாமலா இருக்கிறார்கள்? என்று கூறியுள்ளார். இதை விட இந்த விஷயத்தை எளிதில் யாரும் விளக்க முடியாது.
திரையரங்குகள் பாதிக்கப்படுவதை பற்றி மட்டும் பேசுபவர்கள், தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதையும் சிந்திக்க வேண்டும். சில பெரிய படங்களை மட்டுமே திரையரங்க உரிமையாளர்கள் திரையிடுகின்றனர். இதன்காரணமாக, குறைந்த செலவில் படம் எடுப்போர் திரையரங்குகள் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.
சினிமாவை சி2எச் மூலம் நாங்கள் அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்கிறோம்.
முதலில் சி2எச் மூலம் “ஜே.கே. எனது நண்பன்’ என்ற திரைப்படத்தை வெளியிடுகிறோம். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களை வெளியிட உள்ளோம். நாங்கள் வெளியிடும்போதே திரையரங்குகளும் வெளியிட விரும்பினால் அவர்களுக்கு வழங்குவோம்.
ஜனவரி 15 முதல் வாரம் ஒரு படத்தை இந்த சி2எச் மூலம் வழங்கப் போகிறோம்,” என்றார்.
-http://tamil.filmibeat.com