தயாரிப்பாளர்களுக்கு கை கொடுத்த சின்னப் படங்கள்

600கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறு முதலீட்டில் தயாரான சில படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. இவற்றின் பட்ஜெட் அதிகபட்சம் ரூ 5 கோடிக்குள்தான் என்பதால், போட்ட தொகையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம் பார்த்துவிட்டனர் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள். அப்படி வெற்றி பெற்ற 5 படங்களின் பட்டியல் இது…

கோலி சோடா

பெரிய நட்சத்திரங்கள், நம்பர் ஒன் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாருமில்லாத கோலி சோடா படத்தின் பட்ஜெட் ரூ 2.5 கோடிதான். விஜய் மில்டன் இயக்கிய இந்தப் படம் ரூ 15 கோடி வரை சம்பாதித்துக் கொடுத்தது. புதிய கதை, சொன்ன விதம் என இயக்குநரின் திறமையால் ஜெயித்த படம் இது.

மஞ்சப்பை

விமல் – ராஜ்கிரண் என்ற புதிய கூட்டணியில் உருவான இந்தப் படத்துக்கு, சென்னையில் கிடைத்த வரவேற்பை விட, புறநகர் பகுதிகளில் கிடைத்த வரவேற்பு அதிகம். ரூ 4.5 கோடியில் உருவான இந்தப் படத்துக்கு ரூ 15 கோடி வரை கிடைத்தது. ராஜ்கிரண்தான் இந்தப் படத்தின் ப்ளஸ்.

சலீம்

விஜய் ஆன்டனி நடித்து வெளியான இரண்டாவது படம். முதல் படமான நான் மாதிரியே இந்தப் படமும் நல்ல விமர்சனங்கள், வசூலைப் பெற்றது. ரூ 4 கோடிக்குள் தயாரான இந்தப் படம் ரூ 10 கோடி வரை வசூலைப் பெற்றது. மக்கள் எப்படிச் சொன்னால் விரும்புவார்கள் என்பதை உணர்ந்து காட்சிகளை வைத்திருந்தது இந்தப் படத்தின் பலம்.

நாய்கள் ஜாக்கிரதை

ரூ 3 கோடியில் தயாரான நாய்கள் ஜாக்கிரதை, சிபிராஜுக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்தது. தியேட்டர் வசூல், தொலைக்காட்சி உரிமை எல்லாம் சேர்த்து ரூ 10 கோடி வரை வசூலானது. நாயின் சாகசங்கள்தான் படத்தின் பலம்.

பிசாசு

வெறும் ஒன்றரை கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட படம் இந்த பிசாசு. மிஷ்கின் இயக்கிய இந்தப் படம் அவருக்கு பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ளது. வணிக ரீதியில் அவர் நீண்ட நாளைக்குப் பிறகு பார்த்த வெற்றி இது. கிட்டத்தட்ட 6 கோடி ரூபாயை தியேட்டர்கள் மற்றும் தொலைக்காட்சி உரிமை மூலம் பெற்றுள்ளது பிசாசு. இன்னும் அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. அன்பான பிசாசுதான் இந்தப் படத்துக்கு வெற்றியைத் தந்துள்ளது.

-http://tamil.filmibeat.com