லிங்கா’ படத்தால் நஷ்டம் என ஆதாரத்துடன் நிரூபித்தால் இழப்பீடு வழங்கத் தயார்

“லிங்கா’ படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விநியோகஸ்தர்கள் உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தால் இழப்பீடு வழங்கத் தயார் என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்தார்.

“லிங்கா’ படத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான இழப்பீட்டுத் தொகையை நடிகர் ரஜினிகாந்த் தலையிட்டு பெற்றுத் தருமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: “லிங்கா’ படத்தால் பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினியின் பெயரை களங்கப்படுத்தும் விதமாகவும், அதைவிட என் மீதும் ரஜினி மீதும் கன்னட முத்திரை குத்தும் வகையிலும் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.

ரூ. 45 கோடிக்கு படத்தை தயாரித்து ரூ 220 கோடியை கொள்ளையடித்து விட்டதாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் துளியும் உண்மை இல்லை. “லிங்கா’ திரைப்பட வசூல் விவரங்களை திரையுலகைச் சேர்ந்த 10 பேரிடம் காட்டி நஷ்டம் என நிரூபித்தால் ஏற்பட்ட இழப்பீட்டை வழங்கத் தயார். ஆனால் அதைச் செய்யாமல் ஊடகங்களையும் மக்களையும் விநியோகஸ்தர்கள் குழப்பி வருகின்றனர். படத்தால் நஷ்டம் என்பதை அவர்கள் நிரூபிக்காவிட்டால் எங்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்தின் கடைக்கோடி ரசிகனாக “லிங்கா’ படத்தைத் தயாரித்தேன். அதை எடுத்து முடிக்க பட்ட சிரமங்கள் யாருக்கும் தெரியாது. “லிங்கா’ படம் வெளியான நாளிலிருந்து அப்படத்துக்கு எதிரான செய்திகளை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இதற்கு ஏதோ பின்னணி இருப்பதாக நினைக்கிறேன்.

சரியான ஆதாரங்களின் மூலம் நிரூபிக்காமல் தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தினால் நீதிமன்றத்தில் இந்த பிரச்னையை சந்திக்க தயாராக உள்ளேன் என்றார் அவர்.

இதனிடையே “லிங்கா’ படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் திருப்பித் தர அவரை, நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்த வேண்டுமென வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே விநியோகஸ்தர்கள் சனிக்கிழமை அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

-http://www.dinamani.com