இயக்குநர் சேரனின் சி2எச் திட்டம் திடீர் ஒத்திவைப்பு

புதிய திரைப்படங்களை தயாரிப்பாளர்களின் அனுமதியுடன் டி.வி.டி.க்களாக மாற்றி, அதை பொதுமக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் சி2எச் என்ற நிறுவனத்தை திரைப்பட இயக்குநர் சேரன் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடாக சேரன் இயக்கியுள்ள ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் பொங்கலன்று 15ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, சி2எச் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதன் நிறுவனரும், இயக்குநருமான சேரன் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “திரைப்படத்துறையின் நலன் கருதி, சிறு தயாரிப்பாளர்களின் நலன் கருதி திரைப்படங்களை நல்ல நோக்கத்தோடு மக்களிடம் கொண்டு சேர்க்க தொடங்கப்பட்டதே சி2எச் நிறுவனம்.

திரையரங்கங்கள் அல்லாமல் பிற வழிகளிலும் திரைத் துறைக்கும் வரும் வருமானத்தை ஒன்று சேர்த்து தயாரிப்பாளர்கள் நலம் பெறும் எண்ணத்தோடு கடந்த ஒரு வருட காலமாக உழைத்து, தமிழகம் முழுவதும் 156 வினியோகஸ்தர்களையும், 5000 முகவர்களையும் உருவாக்கியுள்ளோம்.

இவர்களின் ஒத்துழைப்போடு தமிழகம் முழுவதும் தலை விரித்தாடும் ‘பைரஸி மார்க்கெட்’ திருட்டு டிவிடி வியாபாரத்தைத் தடுக்க திரைக்கு வரும் புதிய திரைப்படங்களை, வெளியாகும் அதே நாளில் ரூ.50 விலையில் மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்த்து தயாரிப்பாளர்களின் முதலீட்டை மீட்டெடுக்க வழி செய்வது தான் இந்நிறுவனத்தின் நோக்கம்.

அதே நேரம் ஆரம்பத்தில் இருந்து திரையரங்கங்களிலும் கண்டிப்பாக சி2எச் ன் திரைப்படங்கள் வெளியிடப்படும் என சொல்லி வந்தோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டோம். தற்போது திரைப்படத்துறையின் சூழலை புரிந்து கொண்ட திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பேசி முடிவெடுக்க முன் வந்திருக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை ஏற்று, அனைவரது நன்மைகளையும் கருதி அவர்களோடு பேசி முடிவெடுத்த பின் சி2எச் தங்களின் முதல் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது.

ஜனவரி 15ம் தேதி வெளியிடுவதாக இருந்த முயற்சியை ஒத்தி வைத்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் முடிவுக்குப் பின் தமிழகம் முழுவதும் திரையரங்குகளிலும், மற்ற முறைகளிலும் வெளியிடலாம் என சி2எச் நிறுவனம் முடிவு செய்திருப்பதால், தற்போதைய ஜனவரி 15 வெளியீடு என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறோம்,” என சேரன் தெரிவித்துள்ளார்.

-http://www.dinamani.com