“மெசஞ்சர் ஆஃப் காட் ‘ படத்துக்கு எதிர்ப்பு

  • “மெசஞ்சர் ஆஃப் காட்’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கிய அமைப்பினர்.

“மெசஞ்சர் ஆஃப் காட்’ என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தை திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஹரியாணாவில் செயல்படும் “தேரா சச்சா சௌதா’ என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் இயக்கி நடித்துள்ள இப்படத்தை வெளியிடக் கூடாது எனக் கூறி, பல்வேறு சீக்கிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதையொட்டி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பதிண்டா மண்டல காவல்துறை ஐ.ஜி. பரமராஜ் சிங் கூறியதாவது:

பஞ்சாபின் பதிண்டா மண்டலதுக்குள்பட்ட முக்த்ஸர், மான்ஸா, ஃபெரோஸ்பூர், ஃபரீத்கோட், மோகா ஆகிய மாவட்டங்களில் தேரா சச்சா அமைப்பின் ஆதரவாளர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர். இதையொட்டி, அப்பகுதிகளில் அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்க 13 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மாநிலம் முழுவதும் ஏராளமான துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பதிண்டா பகுதியிலிருந்து தேரா சச்சா அமைப்பைச் சேர்ந்த 15 ஆயிரம் பேர், “மெசஞ்சர் ஆஃப் காட்’ திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சியைக் காண்பதற்காக ஹரியாணாவின் குர்கான் நகருக்கு வெள்ளிக்கிழமை சென்றனர். அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதேபோல் ஹரியாணாவிலும் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் தீவிரம்: “மெசஞ்சர் ஆஃப் காட்’ திரைப்படத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியாணாவின் அம்பாலா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சீக்கிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. சிரோமணி அகாலி தளம், ஹரியாணா சீக்கிய குருத்வாரா குழு உள்ளிட்ட பல அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தேசா சச்சா சௌதா அமைப்புக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

60 பேர் கைது: இதனிடையே, ஹரியாணாவின் குர்கான் நகரில் இத்திரைப்படத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்திய தேசிய லோக் தளக் கட்சியைச் சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் எதிர்ப்பு: இதனிடையே, சர்ச்சைக்குரிய இந்தத் திரைப்படத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைந்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி வலியுறுத்தியுள்ளார்.

-http://www.dinamani.com