ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துள்ளதை சாதனையாகக் கருதவில்லை. சாதனை என்று எதுவுமில்லை என்று தெரிவித்தார் இசையமைப்பாளர் இளையராஜா.
பாலாவின் “தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் ஆயிரம் படங்கள் என்ற மைல்கல்லை தொட்டிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பாலிவுட் திரையுலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது.
நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்ட இந்திய திரையுலகினர் இந்த விழாவில் கலந்துகொண்டு இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டினர்.
இதையடுத்து, புதன்கிழமை பிற்பகல் விமானம் மூலம் சென்னை திரும்பிய இளையராஜா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துள்ளதை நான் சாதனையாகக் கருதவில்லை. என்னைப் பொருத்தவரை சாதனை என்று எதுவுமில்லை. எல்லாம் கடந்து போகக் கூடிய ஒன்றுதான். இத்தனை வருடங்களில் இத்தனை படங்களில் நான் பயணித்து வந்ததாக நினைக்கவில்லை. மற்றவர்கள்தான் என்னோடு பயணித்திருக்கிறார்கள். நான் அங்கேதான் இருக்கிறேன். மும்பையில் நடந்த பாராட்டு விழா என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
நடிகர் அமிதாப் பச்சன் என் மீது கொண்டுள்ள பாசம் புரிந்தது. அவரே, முன் வந்து எல்லோருக்கும் அழைப்பு விடுத்ததாகச் சொன்னார்கள். அந்த விழாவுக்கு யாரெல்லாம் வருவார்கள் என்பது எனக்குத் தெரியாது. கமலும் ரஜினியும் இந்த விழாவில் கலந்துகொள்வது எனக்கு முன் கூட்டியே தெரியாது. அவர்களுடைய வருகை எனக்கு வியப்பாக இருந்தது என்றார் இளையராஜா.
-http://www.dinamani.com