இப்போதெல்லாம் படத்துக்குப் படம் தாதாக்களைப் பார்க்கிறோம். தாதாக்களாக புதுப்புது நடிகர்கள் நடிப்பதையும் பார்க்கிறோம். ஆனால் நிஜ தாதாக்களே நடிகர்களாக நடித்து படம் பார்த்ததுண்டா..? அப்படி ஒரு படமாக உருவாகியிருக்கிறது ‘சபரன்’ திரைப்படம்.
இந்தப் படத்தை கதை எழுதி தயாரித்துள்ளது முதல் நடித்துள்ள நடிகர்கள் வரை பலரும் நிஜமாகவே தாதாக்கள்தான். தன்ஹா மூவீஸ் சார்பில் படத்திற்கு கதை எழுதி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளவர் அம்ஜத் கே.பி என்பவர். இவர் கேரளாவில் பிரபல தாதா. பல நிழல் உலகங்கள் இவருக்கு ஒளி உலகமாகத் தெரியும் அளவுக்கு பரிச்சயமாம்.
‘சபரன்’ படத்தை இயக்கியுள்ளவர் ஆர்.புவனேஷ். இவர் ஏற்கெனவே தமிழில் ‘ஆறாவது வனம்’, மற்றும் மலையாளத்தில் ‘பகவதிபுரம்’ ஆகிய படங்களை இயக்கியவர். தாதா ஒருவர் நாயகனாக நடித்தாலும் அவர் ஏற்று நடிக்கிற கதாபாத்திரம் போலீஸ் அதிகாரி வேடம்.
புதுமுகங்களான பிரஷாந்தி, தீபிகா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பிரதான வில்லனாக டார்வின் க்ரூஸ் நடித்துள்ளார். மற்றும் ‘காதல்’ தண்டாபாணி, அப்புக்குட்டி, வின்சென்ட் அசோகன், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். துபாயில் உள்ள நிஜமான தாதாக்களும் இதில் நடித்துள்ளனர்.
இசை பி.பி. பாலாஜி. இவர் ஏற்கெனவே ‘சூரன்’ ‘துணை முதல்வர்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளவர். சிட்டிராஜ் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் – புவனேஷ். ஸ்டண்ட் – சுப்ரீம் சுந்தர், நாக் அவுட் நந்தா, நடனம் – பாபி, நிர்மல், அருண்.
படம் பற்றி பேசிய இயக்குநர் புவனேஷ், “’சபரன்’ என்றால் வேட்டைக்காரன். ஒரு வேட்டைக்காரனாய் எழுந்து புறப்பட்டு நாசகார கும்பலை வேரறுப்பவன்தான் இந்த நாயகன் ‘சபரன்’. கோவை அருகே ஒரு குண்டு வெடிப்பு நடக்கிறது. அது பற்றி புலனாய்வு செய்ய வருகிறார் ஒரு போலீஸ் அதிகாரி. விசாரணை செய்யத் தொடங்கினால் தோண்டத் தோண்ட புதையல் கிடைப்பது போல பல நிழல் உலக தாதாக்கள், பல நாட்டு தீவிரவாதிகள், அரசியல் புள்ளிகளின் தொடர்புகள், அரசியல்வாதிகளின் தேச துரோகங்கள் எல்லாம் வரிசையாக அம்பலமாகின்றன. அந்தக் குண்டு வெடிப்பின் ஆணிவேர் எது என்று கண்டறியும் முயற்சியே இந்த ‘சபரன்’ படக் கதை..” என்றார்.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதிவிட்டு பல கதாநாயகர்களிடம் படமாக்க முயன்று பல லட்சங்கள் செலவு செய்து அலைந்திருக்கிறார் தயாரிப்பாளர் அம்ஜத். ஆனால் நம் நாயகர்கள் இந்த நிஜ தாதாவுக்கே ‘தண்ணி’ காட்டிவிட்டார்கள். கடைசியில் தானே தயாரிப்பது என்று முடிவெடுத்து இறங்கி விட்டார்.
இயக்குநரைக்கூட தடாலடியாகவே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஒரு நண்பர் மூலமாக இயக்குநப் புவனேஷுக்கு இந்த தயாரிப்பாளரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இவரைக் கடத்தாத குறையாக தூக்கிச் சென்று கேரளாவில் ஒரு படகு வீட்டில் ஒரு நாள் அடைத்து வைத்து மிரட்டாத குறையாக படத்தை இயக்கம் செய்து தரும்படி ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்.
“இது ‘ஜிகர்தண்டா’ அசால்ட் சேது கதைபோல இருக்கிறதே?” என்றால் “ஆமாம்” என்கிறார் இயக்குநர் புவனேஷ். “சினிமா ஆசையில் ஒரு அப்பாவி டைரக்டரை மிரட்டி தன்னை கதாநாயகனாக்கும் ஒருவனின் கதைதான் ‘ஜிகர்தண்டா’ . அதைப் போலத்தான் என்னையும் ஒரு வகையில் இந்தப் படத்துக்கு டைரக்டர் ஆக்கியிருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, லொக்கேஷன் எல்லாம் தயார் செய்து வைத்திருந்தார்கள். ‘நீ டைரக்ட் செய்தால் மட்டும் போதும்’ என்றார்கள். அப்படி என்னை சிக்க வைத்த படம்தான் இந்த சபரன்” என்கிறார் புவனேஷ்.
அப்படி மிரட்டி எடுத்த படம் எப்படி வந்திருக்கும்..?
“அவர்களது உருட்டு மிரட்டலை முரட்டு அன்பு என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் தெரியாமல் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று நினைத்தேன். பிறகுதான் அவர்களின் இயல்பே அதுதான் என்று புரிந்து கொண்டேன். தயாரிப்பாளரின் சினிமா பற்றிய ஆர்வம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
போலீஸ் பற்றி எத்தனையோ படம் வந்திருக்கும். இது போலீஸின் பெருமையைக் கூறுகிற படமாக இருக்கும். இது வழக்கமான படமாக இருக்காது. காதல், காமெடி எல்லாம் இருக்காது. முழு நீள ஆக்ஷன் படம்.
எனக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்தார்கள். படப்பிடிப்பிலும், சம்பளத்திலும் எந்தக் குறையும் வைக்கவில்லை” என்கிறார் இயக்குநர் புவனேஷ்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, பொள்ளாச்சி, கொடைக்கானல், பாண்டிச்சேரி, வால்பாறை, கேரளாவில் கொச்சி, கொல்லம் மட்டுமல்ல ஹிமாச்சலப் பிரதேசத்தில் பனி மூடிய ரொதாங்க் பார்க், அந்தமான் என இந்தியாவில் பல பகுதிகளிலும் இந்த ‘சபரன்’ படமாகியுள்ளது. மேலும் பஹ்ரைன், துபாய் போன்று வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒரு பெரிய செட் போட்டும் படப்பதிவு நடந்துள்ளது. படத்தில் 5 பாடல்கள். ஒரு பாடல் துபாய் க்ளப்பில் படமாக்கியுள்ளார்கள். இதற்காக ரஷ்யாவைச் சேர்ந்த பெல்லி டான்சர்களை அழைத்து ஆட வைத்துள்ளனர்.
இப்படம் வரும் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளது.
-http://www.dinamani.com