ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை – திரை விமர்சனம்

jkநாயகன் சர்வானந்த் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை கிட்டி அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சர்வானந்த், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்,

வார கடைசியில் நண்பர்களுடன் ஊரை சுற்றுவது, சமூக வலைதளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதுமாக பொழுதை கழித்து வருகிறார். திடீரென ஒருநாள் வேலையை விட்டுவிட்டு தனியாக பிசினஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

இதற்கு நண்பனான சந்தானத்திடம் ஆலோசனை கேட்கிறார். அதற்கு சந்தானம் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய ஆலோசனை கூறுகிறார். இதற்காக லோன் வாங்குவதற்காக தனக்கு தெரிந்த வங்கி அதிகாரியான ஜெயப்பிரகாஷை சந்திக்க சர்வானந்தை கூட்டிச் செல்கிறார் சந்தானம்.

இவர்கள் போகும் நேரம் ஜெயப்பிரகாஷ் வெளியில் சென்றிருப்பதால் அவர் வர நேரமாகும் என அவரது வீட்டார் கூறுகின்றனர். இருக்கிற நேரத்தில் அவருடைய வீட்டை ஒரு ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு அலங்காரம் செய்கிறார் சர்வானந்த்.

வீட்டுக்கு திரும்பியதும் தனது வீட்டை ஆச்சர்யமுடன் பார்க்கிறார் ஜெயப்பிரகாஷ். இதையெல்லாம் செய்தது சர்வானந்த் தான் என்று தெரிந்ததும், இதையே தொழிலாக செய்யலாமே என்று அவருக்கு ஆலோசனை கூறுகிறார்.

மேலும், இவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே நிறைய வீடுகள் இருப்பதால், அவற்றை அலங்காரம் இவர்களுக்கு சிபாரிசு செய்வதாகவும் கூறுகிறார்.

இதற்கு ஒப்புக்கொண்ட சர்வானந்த், தன்னுடன் பள்ளிப்படிப்பிலிருந்து தோழியாக பழகிக் கொண்டிருக்கும் நித்யா மேனன் மற்றும் சில நண்பர்களையும் சேர்ந்துக் கொண்டு புதிய கம்பெனி ஒன்றை தொடங்குகிறார்.

அனைவரும் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீடுகளை அலங்காரம் செய்து அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல், வில்லா ஒன்றை உருவாக்கி அதை விற்பனையும் செய்கிறார்கள். இதிலும் அவர்களுக்கு வெற்றியை கிடைக்கிறது.

வெற்றிக்களிப்பில் திளைத்துக் கொண்டிருக்கும் சர்வானந்த், அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டே இருக்கிறார். ஒருகட்டத்தில் சர்வானந்திற்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையிலிருந்து அவர் மீண்டாரா? அந்த பிரச்சினை அவருடைய வாழ்க்கையை எப்படி கொண்டு சென்றது? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சர்வானந்த் சிறப்பாக நடித்திருக்கிறார். குடும்பத்தை பற்றி யோசிக்கும் போதும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் காட்சிகளிலும் இவரது நடிப்பின் திறமை சிறப்பு. நாயகி நித்யாமேனன் அழகாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சந்தானத்தின் காமெடி படத்தில் பெரியதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம். பிரகாஷ் ராஜ், ஜெயப்பிரகாஷ், ஆகியோர் வழக்கம்போல் அவர்களுக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் சேரன், தனது முந்தைய வெற்றிப்படங்களைவிட இப்படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். தன்னுடைய பாணியில் ஆபாசம் இல்லாமல் ஒரு அழகான படத்தை கொடுத்ததற்காக மீண்டும் ஒருமுறை இவரை பாராட்டலாம்.

நடுத்தர இளைஞனின் வாழ்க்கை போராட்டத்தை அற்புதமாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். ஆனால், கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தோடு சொல்லியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ஜி.வி.பிரகாஷின் இசை படத்திற்கு கூடுதல் பலம். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சித்தார்த்தின் ஒளிப்பதிவு அருமை.

மொத்தத்தில் ‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ புரிந்தவர்களுக்கு பாடம்

-http://123tamilcinema.com