அதான் ஒரிஜினல் டிவிடியே தர்றோமே.. திருட்டு விசிடி எதுக்குங்க? – சேரன்

cheransதிருட்டு சி.டி.யை மக்கள் ஆதரிக்கக் கூடாது என திரைப்பட இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருட்டு சி.டி. பிரச்னை தொடர்பாக வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர, காவல் துறை ஆணையரகத்துக்கு மனு கொடுக்க புதன்கிழமை வந்த சேரன், அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

நான் இயக்கிய “ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற திரைப்படத்தை மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் வகையில் டி.வி.டி.யாக முதல் நாளிலேயே வெளியிட்டேன். இதை எனது நிறுவனமான சி2எச் நிறுவனம் மாநிலம் முழுவதும் மக்களிடம் கொண்டு சென்றது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. இன்று ஒரு குடும்பம் திரையரங்குக்குச் சென்று திரைப்படம் பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டாயமாக தேவைப்படுகிறது. அதைவிட ரூ. 50 செலுத்தினாலே இந்த திரைப்படத்தின் ஓரிஜினல் டிவிடியை எங்களிடம் பெற்று, மக்கள் வீடுகளில் இருந்தபடியே திரைப்படத்தை எவ்வித சிரமமும் இன்றி கண்டு ரசிக்கலாம்.

இந்தத் திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதனிடையே எங்களது ஒரிஜினல் சி.டியிலிருந்து காப்பி செய்து திருட்டு சி.டி. தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விற்பனை செய்ததாக மாநிலம் முழுவதும் 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதேபோல கேபிளிலும் இந்த திரைப்படம் எவ்வித அனுமதியும் இன்றி ஒளிபரப்பப்படுகிறது.

இது தொடர்பாக 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. திருட்டு சி.டி.க்கு மக்கள் எந்த சூழ்நிலையிலும் ஆதரவு அளிக்கக் கூடாது. நாங்கள் தரமான ஒரிஜினல் டிவிடியை குறைந்த விலைக்குக் கொடுத்தபோதும், மக்கள் திருட்டு சிடி வாங்குவது வருத்தம் தருகிறது.

திருட்டு சி.டி. விற்பவர்கள், கேபிள் ஒளிபரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே புகார் செய்துள்ளேன். இப்போது ஆணையரிடம் புகார் செய்ய வந்தேன். இந்தப் பிரச்னையில் தமிழக காவல்துறை எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது,” என்றார் சேரன்.

http://tamil.filmibeat.com