தடைகளை தகர்த்தவர் இந்த உலக நாயகன்- ஸ்பெஷல்

தடைகளை தகர்த்தவர் இந்த உலக நாயகன்- ஸ்பெஷல் - Cineulagam

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கும் ஒரு சில மனிதர்களின் முன்னோடி கமல்ஹாசன். இன்று யாரு வேண்டுமானாலும் புது புது விஷயங்களை சினிமாவிற்குள் புகுத்தலாம், ஆனால், இதற்கு விதை கமல் போட்டது. ஆனால், அவரின் படம் வெளிவரும் ஒவ்வொரு சமயமும் ஏதோ ஒரு பிரச்சனை அவர் வீடு தேடி கொரியரில் வரும். அவர் சந்தித்த சில பிரச்சனைகள் இதோ உங்களுக்காக..

விஸ்வரூபம்

ஊர்ல 10, 15 படம் எடுத்தவன் எல்லாம் நிம்மதியாக இருக்க, விஸ்வரூபம் என்ற ஒரு படம் எடுத்து கமல் பட்ட கஷ்டத்தை உலகமே அறியும். இப்படத்தினால் இவர் சொந்த வீடே ஏலத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது. ஏன், இவரே நாட்டை விட்டு கிளம்புகிறேன் என்று கூறும் நிலை ஏற்பட்டது. பிறகு, இவருக்கு கிடைத்த நல்ல மனிதர்களின் ஆதரவால், படம் வெளிவந்து வெற்றி நடைப்போட்டது.

மன்மதன் அம்பு

கமல் காமெடி படம் எடுத்தால் கூட அதிலும் பிரச்சனை தான் போல, அந்த வகையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த மன்மதன் அம்பு படத்தில், இந்து கடவுளை கிண்டல் செய்யும் விதமாக ஒரு கவிதை உள்ளது, அதை நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். கமலும் இது என்னுடைய படமாக இருந்தால் நீக்க மாட்டேன், வேறு ஒருவருடைய படம் அதனால் நீக்க சம்மதிக்கிறேன் என்றார்.

தசாவதாரம்

இந்த படத்திலும் அதே பிரச்சனை தான், ஒரே மதத்தை சார்ந்த இரண்டு பிரிவுகள் பற்றி இப்படத்தின் ஓப்பனிங் காட்சியில் காட்டப்பட்டது. இதில் ஒரு சமூகத்தினை கமல் கொச்சை படுத்துகிறார் என போர் கொடி தூக்க,ஆனால், இது கமலின் கனவுப்படம் என்பதால், எதற்கும் ஈடு கொடுக்காமல், இறுதியில் வெற்றி கமலுக்கு கிடைத்தது.

விருமாண்டி

படம் பூஜை போட்டு பெயர் வைத்தவுடம் விருமாண்டிக்கு வந்தது பிரச்சனை. ஆனால், வந்தது விருமாண்டிக்கு இல்லை, சண்டியருக்கு. ஆம், முதலில் இப்படத்திற்கு சண்டியர் என தான் பெயர் வைக்கப்பட்டது, பிறகு சிலர் இந்த தலைப்பை மாற்ற வேண்டும் என கூற, பல வாக்கு வாதங்களுக்கிடையே படத்தில் டைட்டில் மாற்றப்பட்டது.

கமல் இதுப்போன்ற பல பிரச்சனைகளை சினிமாவின் வாயிலாக தன் வாழ்வில் பார்த்தவர். இதற்கெல்லாம் ஒரே பதில் அவர் படத்தில் பாடல் வரிகள் தான். தடைகளை வென்று சரித்திரம் படைத்தவர் யார் என்று தெரிகிறதா, இவன் தீ என்று புரிகிறதா?

-http://www.cineulagam.com