ஜெயம் ரவி படத்தை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு

dandaஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘டண்டனக்கா’ என துவங்கும் பாடல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டி.ராஜேந்தரை இழிவுபடுத்துவதுபோல் இந்த பாடல் இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

‘டண்டனக்கா’ என்பது டி.ராஜேந்தர் படங்களில் சொல்லும் பிரபலமான வசனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் வீடியோ இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இதனை பாடி உள்ளார்.

‘டண்டனக்கா’ பாடலில் டி.ராஜேந்தரை இழிவுபடுத்தவில்லை என்று ஜெயம்ரவி மறுத்தார். அவர் கூறும்போது, ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் டி.ராஜேந்தர் ரசிகனாக நான் வருகிறேன்.

அவரின் தன்னம்பிக்கையே எனது கேரக்டராக இருக்கும். எனவேதான் ‘டண்டனக்கா’ பாடலை படத்தில் இடம்பெற வைத்தேன். அதில் டி.ராஜேந்தரை அவமதிக்கும் வரிகள் இல்லை. அவரை பெருமைபடுத்துவதாகவே இருக்கும்’’ என்றார்.

இந்த நிலையில் ‘டண்டனக்கா’ பாடலை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ‘ரோமியோ ஜுலியட்’ தயாரிப்பாளர் நந்தகோபால், டைரக்டர் லஷ்மண், இமான், அனிருத் ஆகியோருக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நாகப்பட்டினத்தில் ‘ஒரு தலை காதல்’ படப்பிடிப்பில் இருந்த டி.ராஜேந்தரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘டண்டனக்கா பாடலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி எனது வக்கீலிடம் அறிவுறுத்தி இருக்கிறேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன’’ என்றார்.

இசையமைப்பாளர் இமான் கூறும்போது,‘‘ டி.ராஜேந்தரை பெருமைப்படுத்துவது போல்தான் இந்த பாடலை உருவாக்கி உள்ளோம். அவரை இழிவுபடுத்தவில்லை. அவரிடம் இருந்து வக்கீல் நோட்டீஸ் வந்துள்ளது’’ என்றார்.

தயாரிப்பாளர் நந்தகோபால் கூறும்போது, ‘‘டண்டனக்கா பாடலில் டி.ராஜேந்தரை கொச்சைப்படுத்தவில்லை. படத்தை பார்க்க அவர் விரும்பினால் தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்பாக அவருக்கு காட்ட தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

-http://123tamilcinema.com