நண்பேன்டா – விமர்சனம்

எந்தப் பெண்ணை ஒரே நாளில் மூன்று தடவை பார்க்கிறாயோ அவள்தான் உன் மனைவி என்று மகனிடம் சொல்லிவைக்கிறார் அம்மா. நண்பனின் ஊருக்குச் செல்லும் ஹீரோ, அங்கு ஹீரோயினை மூன்று தடவை பார்த்துவிடுகிறார். உடனே காதலில் விழுகிறார். ஏதோ பெரிய பிளாஷ்பேக்கை தாங்குபவர்போல காண்பிக்கப்படும் ஹீரோயினும், சில காட்சிகளுக்குப் பிறகு ஹீரோவை ஏற்றுக்கொள்கிறார். இடையில், இருவருக்குமிடையே சிறு ஊடல். காதலினால் ஹீரோவுக்கு சில பிரச்னைகளும் உருவாகின்றன. கடைசியில், பலப்பல திருப்பங்களைத் தாண்டி, எப்படி ஹீரோவும் ஹீரோயினும் ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் நண்பேன்டா.

இந்தப் படத்தில் நிறைய கிளைக் கதைகள். சந்தானம் காதல் கதை, ஹோட்டல் பிளாஷ்பேக், வில்லன், வில்லி, மூன்றாவது நண்பனான கருணாகரன் ஆகியோரின் பழி வாங்கும் படலங்கள் என திரைக்கதையில் ‘திருப்பங்களுக்கு’ குறையே இல்லை! இவை, படத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவதற்குப் பதிலாக, முட்டுக்கட்டையாக அமைந்துவிடுவதுதான் பெரிய பிரச்னையாகிவிடுகிறது.

சிரிக்கும்படியான காமெடி வசனங்கள் சில இருந்தாலும், அதற்கேற்ற உருப்படியான காட்சிகளோ சுவையான திருப்பங்களோ படத்தில் இல்லை. தேவையில்லாத காட்சிகள் பெரும் அவஸ்தை. ஆக்‌ஷன் பட வில்லன்போல பலத்த கைத்தட்டலுடனும் பில்ட்-அப்புடனும் அறிமுகமாகும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், போகப் போக காமெடி பீஸாக மாறிவிடுவதால், படத்தின் திருப்புமுனையாக இருக்க வேண்டிய இந்தக் கதாபாத்திரம் வீணாகப் போய்விடுகிறது.

நயன்தாராவுக்கு வில்லன், வில்லி, பிளாஷ்பேக் எல்லாம் உண்டு. எல்லாமே போகப் போக புஸ்ஸாகிவிடுவதால், ரசிகர்களுக்கு மேலும் மேலும் ஏமாற்றம் உண்டாகிறது. இதனால், இரண்டரை மணி நேரமும் எப்போது காமெடி வசனம் வந்து மன அழுத்ததைக் குறைக்கும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டியதாகிவிடுகிறது.

உதயநிதிக்கு ஏற்ற கதாபாத்திரம். ஜாலியாக வந்து போகிறார், நடனமாடுகிறார், சண்டை போடுகிறார். நயன்தாரா கதாபாத்திரம் நேர்த்தியாக இல்லாவிட்டாலும், அவர் குறையில்லாமல் நடித்துள்ளார். பலத்த கரகோஷத்துடன் அறிமுகமாகும் சந்தானத்தை நம்பித்தான் மொத்தக் கதையும் பின்னப்பட்டுள்ளது. சந்தானம், படத்தைக் காப்பாற்றிவிட்டார் என்று சொல்லமுடியாத அளவுக்குப் பல காட்சிகளில் காமெடி ரொம்பவே சுமார். ஷெரினுடனான காதல் காட்சிகள் எல்லாம் படத்துக்குப் பெரிய பலவீனம்.

‘நயன்தாரா…’ பாடலும் அதைப் படமாக்கிய விதமும் அழகு (இசை – ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம்). உணர்வுபூர்வமான காட்சிகள் இல்லாத ஒரு படத்தில், இசையமைப்பாளர்தான் என்ன செய்துவிட முடியும்? சோகமான காட்சியில், திடீரென வெளிநாட்டில் இறங்கி ஹீரோவும் ஹீரோயினும் ‘நீ சன்னோ நியூ மூணோ…’ என்று பாடி ஆடுவதைக் கண்டு தியேட்டரில் திகைத்துப்போகிறார்கள்.

இயக்குநர் ஜெகதீஷுக்கு இது முதல் படம். எல்லாவற்றையும் காமெடியே பார்த்துக்கொள்ளும் என்று களத்தில் இறங்குவது ஆபத்தானது. தமிழில் வெற்றி பெற்ற காமெடி படங்களைப் பார்த்தால், இதர நல்ல அம்சங்களும் இருந்ததால்தான் அவை வெற்றிபெற்றன என்கிற உண்மை விளங்கும். நண்பேன்டாவுக்கு அத்தகைய பலங்கள் இல்லை.

நன்கு சிரித்துவிட்டு வரலாம் என்று வந்த ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து அளித்திருக்க வேண்டாமா ஜெகதீஷ்?

-http://www.dinamani.com