கடந்த ஏழு வருடமாக திரைப்பட மானியம் வழங்கப்படாததால் சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். சிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தரமான படங்களுக்கு அரசு மானியம் வழங்கி வந்தது. நல்ல கருத்துக்களைச் சொல்லும் படமாக இருக்க வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்க வேண்டும். இப்படியான படங்கள் மானியம் கோருவதற்கான தகுதி உள்ளவை. அதை மானியக்குழு பார்த்து மானியம் வழங்கலாமா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும்.
கடந்த 2006ம் ஆண்டு வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. 5 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாக மானியத் தொகையும் உயர்த்தப்பட்டது. ஆண்டுக்கு 30 முதல் 40 படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. ‘ஆனால், 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை, 7 ஆண்டுகளாக எந்த படத்துக்கும் மானியம் வழங்கப்படவில்லை. திரைப்படங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டதால் மானியங்கள் நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு திரைப் படங்களுக்கு 30 சதவிகித கேளிக்கை வரி விதிக்கப்பட்டது.
ஆளும் கட்சிக்கு வேண்டிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு கேளிக்கை வரி விதிவிலக்கு அளிக்கப்படுவதும், மற்றவர்களுக்கு மறுக்கப்படுவதுமான போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் மானியம் பெறும் தகுதியுடைய திரைப்படங்களைப் பார்த்து முடிவு செய்ய, ஒரு நீதிபதி தலைமையில் ஒளிப்பதிவாளர் பாபு, நடிகை எம்.என்.ராஜம், எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்ட சிலரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தொடர்ச்சியாக மானியத்துக்கு விண்ணப்பித்த படங்களைப் பார்த்து வந்தனர். 2007 முதல் 2012 வரையிலான படங்களை பார்த்து முடித்து விட்டதாகவும், இன்னும் 2013 மற்றும் 2014ம் ஆண்டு படங்களை பார்க்க வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் மானியம் வழங்கப்படுவதற்கான எந்த முயற்சியும் அரசின் தரப்பில் இல்லை. அதனால் திரைப்படங்களுக்கு மானியம் என்பது இனி நிறைவேறாத கனவு என்றே தெரிகிறது’ என்கிறார் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர் ஒருவர். ‘ஏழு வருடமாக மானியம் வழங்கப்படாததால் மானியத்துக்கு விண்ணப்பித்துள்ள படங்கள் மலைபோல் குவிந்திருக்கிறது. ஆண்டுக்கு 100 படங்கள் மானியம் கோருவதாக வைத்துக் கொண்டாலும் 700 படங்களை மானிய குழுவினர் பார்க்க வேண்டும். தினமும் 2 படங்கள் பார்த்தாலும் பார்த்து முடிக்க அதிக காலம் பிடிக்கும்.
அதோடு குழுவில் உள்ளவர்கள் முறையாகப் படம் பார்க்க வருவதில்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் வயதானவர்கள் என்பதால் அவர்களால் தொடர்ச்சியாகப் படம் பார்க்க முடியவில்லை. அரசும் மானியம் வழங்குவதில் ஆர்வம் காட்டாததால் அவர்களும் படம் பார்ப்பதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். ஏழு வருடங்களுக்கும் சேர்த்து மானியம் வழங்கினால் அதன் மொத்த தொகை, கோடி கணக்கில் வரும். அதனால் அரசு தயக்கம் காட்டி வருகிறது. இப்போது ஏற்பட்டுள்ள அரசின் மந்த நிலையில் மானியம் வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. மானியம் ரத்து செய்யப்படுதற்கான வாய்ப்புகளே அதிகம்‘ என்கிறார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.
இது தொடர்பாக திரைப்பட மானியக்குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது பேச மறுத்துவிட்டனர். குறைந்த முதலீட்டில் நல்ல படங்களைத் தயாரித்து வெளியிட்டு நஷ்டத்தை சந்தித்த பல தயாரிப்பாளர்கள், இந்த மானியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பத்தில் திரையுலகம் தவித்துக் கொண்டிருக்கிறது.
காணாமல் போன சினிமா விருதுகள்
ஒவ்வொரு வருடமும் திரைப்படத்துறையை சேர்ந்தவர்களுக்கு அரசு, விருதுகளை வழங்கி வந்தது. இந்த விருது கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. ‘இதே போல, அறிஞர் அண்ணா விருது, கலைவாணர், கவிஞர் கண்ணதாசன், தியாகராஜ பாகவதர், ராஜா சாண்டோ, எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் பெயரில் கலைத்துறை வித்தகர் விருதுகளையும் தமிழக அரசு வழங்கி வந்தது. இப்போது அதையும் நிறுத்திவிட்டார்கள். கலைஞர்களுக்கு கைதட்டலும் விருதும்தான் பூஸ்ட். அதையும் வேஸ்ட் ஆக்கி விட்டார்கள்‘ என்கிறார் மூத்த நடிகர் ஒருவர்.
– cinema.dinakaran.com