இனி இலவசமாகவே டிவிடியைக் கொடுத்தாலும் திருட்டுத்தனமாக படங்களை ஒளிப்பரப்புவதும், இணையத்தில் பதிவேற்றுவதும் ஒழியாது போலிருக்கிறது.
திருட்டு டி.வி.டி.யை ஒழிக்கவும், புதிய திரைப்படங்களை வீட்டிலேயே பார்க்கும் வகையில் ‘சி.2.எச்’ சினிமா டூ ஹோம் என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இந்த திட்டத்தில் இயக்குநர் சேரன் இயக்கிய ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படம் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அந்த டிவிடி விலை 50 ரூபாய்தான். இந்த திரைப்படத்தை புதுவையில் டி.வி.டிக்களில் 100-க்கும் மேற்பட்ட முகவர்கள் விற்பனை செய்து வந்தார்கள். ரூ 50 கொடுத்து ஒரிஜினல் டிவிடி வாங்கக் கூட மனசில்லை தமிழ் ரசிகர்களுக்கு. அதையும் ரூ 30க்கு திருட்டு டிவிடிதான் வாங்குவேன் என அடம்பிடிக்கிறார்கள்.
ஜேகே திரைப்படத்தின் திருட்டு டி.வி.டி.க்கள் புதுவையில் விற்கப்படுவதாக விற்பனை முகவர்கள் உருளையன் பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் புதுவையில் உள்ள தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் உரிய அனுமதி பெறாமல் ஒளிபரப்பப்பட்டதாக சேரனுக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி அவர் நேற்று புதுவை வந்தார். அவர் உரிய அனுமதியின்றி திரைப்படத்தை ஒளிபரப்பிய தனியார் தொலைகாட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார்.
அவர் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பெரிய கடை போலீசுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து தனியார் தொலைகாட்சி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை நான்கு லோக்கல் சேனல்கள் மீது சேரன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.