கூத்துக் கலை தமிழர்களின் கலாசாரம்

  • தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவிக்கு பாராட்டுத் தெரிவிக்கிறார் மாவட்ட கூத்துக் கலை பாதுகாப்பு குழுத் தலைவர் டி.ஆர்.சின்னசாமி.

    தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவிக்கு பாராட்டுத் தெரிவிக்கிறார் மாவட்ட கூத்துக் கலை பாதுகாப்பு குழுத் தலைவர் டி.ஆர்.சின்னசாமி.

கூத்துக் கலை தமிழர்களின் கலாசாரம் என்றார் தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலர் ராதாரவி.

தருமபுரி மாவட்ட கூத்துக் கலைஞர்கள் பாதுகாப்புக் குழுவின் பேரவைக் கூட்டம் பெரியார் மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூத்துக் கலை பாதுகாப்புக் குழுத் தலைவர் ஆர்.சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ராதாரவி பேசியது: கூத்துக் கலை தமிழர்களின் கலாசாரம். நாடகம், சினிமா போன்றவை கூத்துக் கலையிலிருந்து பிறந்தவை. இந்தக் கலையின் மூலம் ராமாயணம், மகாபராதம் உள்ளிட்ட இதிகாசங்கள் போன்ற காவியங்களை மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியை கூத்துக் கலைஞர்கள் செய்கின்றனர். இந்தக் கலை, கலைஞர்களின் வாழ்வாதாரம்.

தருமபுரி மாவட்டத்தில், சுமார் 3 ஆயிரம் கலைஞர்கள் கூத்துக் கலையை நம்பி உள்ளனர். இந்த மாவட்டத்தில் அண்மையில் கூத்துக் கலை நடத்தத் தடை விதிக்கப்பட்டது. தற்போது, இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கூத்துக் கலை இரவு முழுவதும் தொடர்ந்து நடத்த காவல் துறையினர், மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். இதுகுறித்து நடிகர் சங்கத் தலைமையிடம் முறையிட்டு, சட்டப்பேரவையில் பேச அறிவுறுத்தப்படும் என்றார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் கவிஞர் ரவீந்திரபாரதி, எம்.ஆர். ராதா நாடக நடிகர் சங்க மாவட்டத் தலைவர் சிங்காரவேலு ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட கூத்துக் கலைஞர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிவரும் தெருக்கூத்துக் கலையைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு 10 மணிக்குமேல் நாடகம் நடத்த விதிக்கப்பட்ட தடையை முழுமையாக நீக்க வேண்டும். 58 வயது நிரம்பிய அனைத்துக் கலைஞர்களுக்கும் நலிந்த கலைஞர்களுக்கான அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் வயதை 67-லிருந்து 58 ஆகக் குறைத்து, ஓய்வூதியத்தை ரூ. 1,500-லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

அரசு விழாக்கள், விழிப்புணர்வு பிரசாரங்களில் மாவட்டக் கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கலைஞர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை, அரசு தொகுப்பு வீடு, உடை, இசைக்கருவிகள் உள்ளிட்ட நாடகத் தளவாடங்கள் மானிய விலையில் வழங்க வேண்டும். தருமபுரியில் இசைப் பயிற்சிப் பள்ளி தொடங்கி, அதில் கூத்துக் கலையைக் கற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-http://www.dinamani.com