“உத்தம வில்லன்’ படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் உள்ள பாடல் வரிகளை நீக்காமல், கமல்ஹாசன் நடித்துள்ள “உத்தம வில்லன்’ படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு பிரிவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எஸ்.ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான “உத்தம வில்லன்’ திரைப்படம் மே 1-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில், “என் உதிரத்தின் விதை…’ என்று தொடங்கும் பாடலில், இந்து மதக் கடவுளான விஷ்ணுவை அவமதிக்கும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. அந்த வரி, இந்து மத மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது.

விஷ்ணு அவதாரங்களில் 3-ஆவது அவதாரமான வராக அவதாரத்தை அவமதிக்கும் வகையில் அந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. எனவே, அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரியை நீக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு அந்த வரியை நீக்காமல் “உத்தம வில்லன்’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கூறும் புகாரில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பாடல் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. மேலும், இந்த மனு விசாரணை செய்வதற்கு தகுதியுடையதாக இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறேன் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.

-http://www.dinamani.com