புதுடில்லி: இந்திய திரை உலகில், ஏதாவது ஒரு வழக்கில் சிக்கி சிறை சென்ற பின், வாழ்க்கையே சிதிலமடைந்த நடிர்கள் பலர். அந்த வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளார் இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கான்.
இந்தி பட உலகில் அழகான காதாநாயகன் இந்த சல்மான். வட மாநிலங்களில் நிறைய இளம் பெண்களின் இரவு தூக்கத்தை கெடுத்தவர். பெரும்பாலான படங்களில், மேலாடை இல்லாமல் ஏதாவது ஒரு காட்சியில் வந்து, “சிக்ஸ் பேக்’ உடம்பைக் காட்டி, பெண்களை ஈர்க்க துடிப்பவர். உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர். இவரது பெரும்பாலான படங்கள், ஓரளவு வசூலை அள்ளும் என்பது கியாரண்டி.
எல்லாம் இருந்து என்ன செய்ய? ஒரு மனிதனுக்கு புகழ் போதை ஏறிய தலையில், மது போதையும் சேர்ந்துகொண்டால் கேட்கவும் வேண்டுமா? இவரும் இந்த போதைகளில் இருந்து தப்பவில்லை.
நல்ல “மப்’பில் காரை ஒட்டிச் சென்று ஒருவர் இறக்க காரணம் ஆனார். வசதியும் வாய்ப்பும் இருந்ததால், வழக்கை பல ஆண்டுகளுக்கு இவரால் இழுக்க முடிந்தது.
“”எங்கள் முதலாளி (சல்மான்) ரொம்ப ரொம்ப நல்லவர். “ஆல்கஹால்’ என்றாலே என்னவென்று தெரியாது. அது மருந்தா, மாத்திரையா என கேட்பவர். சம்பவத்தன்று காரை ஓட்டிச் சென்று சத்தியமாய் ஒருவரை கொன்றது நான் தான். சல்மானுக்கு காரில் ஏறவும் தெரியாது. இன்னொருவர் மீது ஏற்றவும் தெரியாது” என அவரது டிரைவர் கோர்ட்டில் சத்தியம் செய்து சாட்சியம் அளித்தார். இப்படி சாட்சிகளையும் வளைத்தார் சல்மான்.
இன்னமும் நீதியும் தர்மமும் கொஞ்சம் இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில், இவருக்கு மும்பை கோர்ட் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இனி இவரது வாழ்க்கையே அனேகமாக முடிவுக்கு வந்து விடும். ஏனெனில், இதற்கு முன் பல்வேறு வழக்குகளில் சிறை சென்ற “நடிப்பு செம்மல்’கள், அதன் பிறகு தேறி வந்ததாக வரலாறு இல்லை.
மாஜி “சூப்பர் ஸ்டார்’:
இதற்கு முதல் உதாரணம், முன்னாள் தமிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். 1944, நவம்பர் 8ம் தேதி நடந்த பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்கினார். இவருடன் சிக்கிய இன்னொரு “சூப்பர் காமெடி’ நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன். வழக்கின் முடிவில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறை சென்றனர். மேல்முறையீட்டில் விரைவாக வெளியே வந்த பிறகும், இருவரின் சினிமா வாழ்க்கையே இருண்டு விட்டது.
எம்.ஆர்.ராதா:
எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், அவரை 1967, ஜனவரி மாதம் துப்பாக்கியால் சுட்டார். அப்போதைய வில்லன் கம் சிரிப்பு நடிகர் எம்.ஆர்.ராதா. வழக்கின் முடிவில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றார் எம்.ஆர்.ராதா. அதுவரை தமிழ் திரை உலகில் கோலோச்சிக்கொண்டு இருந்த எம்.ஆர்.ராதா, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, பீல்டில் இருந்து “பிய்ந்து’ போனார்.
சஞ்சய் தத்:
1993ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேமன் மாத்யூ மற்றும் கூட்டாளிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதாகவும், அனுமதி இல்லாமல் ஏ.கே.47 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் இந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு மும்பை கோர்ட் வெளியிட்ட தீர்ப்பில், சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
“உள்ளே’ சென்றவர், சென்றவர் தான். இடை இடையே “பரோலில்’ வெளியே வந்து எட்டிப் பார்த்ததோடு சரி. அவரது சினிமா வாழ்க்கை அதோடு முடிவுக்கு வந்தது.
இந்த வரிசையில் தற்போது சல்மான்கானும் சேர்ந்துள்ளார். அனேகமாக அவரது சினிமா வாழ்க்கையும் “அதோ கதி’ தான்.
-http://www.dinamalar.com