டெல்லி: சாலைகளில் வாழும் ஆதரவற்ற ஏழைகளின் நலனுக்காக உழைக்கும் சமூக ஆர்வலர் ஒருவர் சல்மான்கானுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்களின் படங்களை தவிர்க்கவும், தடை செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்து பிரகாஷ் சிங் என்னும் ஆர்வலர், தேசிய வீடமைப்பு அதிகார அமைப்பின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகின்றார். இவர் சல்மான்கான் வழக்கின் தீர்ப்பு குறித்து, “இத்தீர்ப்பை எதிர்க்க கூடாது… கொண்டாடவே வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
“பாலிவுட் உலகத்தினர் இந்தியாவில் இல்லை போல. இந்த தீர்ப்பு தவறான ஒன்றா என்ன? தவறுக்கு துணை போகும் பாலிவுட் பிரபலங்களின் படங்களை நாமும் புறக்கணிக்கவே வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ”
சல்மான் செய்த குற்றத்திற்காகவே இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் யாருக்கும் பயப்படாது என்பதையே இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது” என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2002 ஆம் ஆண்டில், 38 வயது நபரின் மேல் குடிபோதையில் காரை ஏற்றிக் கொன்றார் நடிகர் சல்மான்கான். மேலும், 4 பேர் காயமடைந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த புதன்கிழமை வெளியான நிலையில், பல்வேறு பாலிவுட் நடிகர்கள் சல்மானுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், இத்தீர்ப்பிற்கும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.