சென்னை, : கமர்சியல் ஹீரோக்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று, களத்தில் குதித்து இருக்கிறார்கள் பல காமெடி நடிகர்கள். இது அந்தக் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. என்.எஸ்.கிருஷ்ணன், காளி என்.ரத்தினம் போன்றோர் கதைக்குள் நாயகர்களாக உலா வந்ததுண்டு. கே.ஏ.தங்கவேலு மட்டும் அதில் ஆர்வம் காட்டவில்லை.
அடுத்த தலைமுறையில், காமெடி நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார் நாகேஷ். அவரை ‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர் நீச்சல்’, ‘அனுபவி ராஜா அனுபவி’ உட்பட பல படங்களில் கதையின் நாயகனாக பார்த்து ரசித்தார்கள். பிறகு தேங்காய் சீனிவாசன் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். சுருளிராஜன், ஹீரோவாக நடித்த ‘மாந்தோப்பு கிளியே’ படத்தை மறக்க முடியாது.
இதற்கு அடுத்த தலைமுறையில் கவுண்டமணி, செந்தில் காமெடியில் உச்சம் தொட்டனர். கவுண்டமணியை ஹீரோவாக வைத்து ‘பிறந்தேன் வளர்ந்தேன்’, ‘பணம் பத்தும் செய்யும்’, ‘தலையாட்டி பொம்மைகள்’ போன்ற படங்கள் வந்தன. இப்போது ‘49 ஓ’, ‘எனக்கு வேறு கிளைகள் கிடையாது’ படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். செந்தில், ‘ஆதிவாசியும் அற்புத கைபேசியும்’ என்ற படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பு வந்து கைநழுவிப் போனது.
விவேக், ஹீரோவாக நடித்த ‘சொல்லி அடிப்பேன்’ படம் ரிலீசாகாத நிலையில், ‘நான்தான் பாலா’ வந்தது. விரைவில், ‘பாலக்காட்டு மாதவன்’ வருகிறது. வடிவேலு, ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’ படங்களில் ஹீரோவாக நடித்தார். விரைவில், ‘எலி’ ரிலீசாகிறது. வையாபுரி ஹீரோவாக நடித்த, ‘மழையில் நனைந்த தங்கம்’ என்ன ஆனதென்று தெரியவில்லை.
சந்தானம், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ மூலம் ஹீரோவானார். பிறகு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ரிலீசானது. இப்போது ‘இனிமே இப்படித்தான்’ வரவிருக்கிறது.கஞ்சா கருப்பு, ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ படத்தில் நடித்தார். இப்போது ‘மன்னார் வளைகுடா’ படத்தில் நடித்து வருகிறார். பிரேம்ஜி அமரன், ‘மாங்கா’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கருணாஸ், ‘திண்டுக்கல் சாரதி’ மூலம் ஹீரோவாகி, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘சந்தமாமா’ படங்களில் நடித்தார். மீண்டும் காமெடியில் இறங்கி விட்டார். விடிவி கணேஷ் காமெடி செய்துகொண்டே, ‘இங்க என்ன சொல்லுது’ மூலம் ஹீரோவானார்.
– cinema.dinakaran.com
பேராசை பெரும் நஷ்டம்
வடிவேலுவின் எலி படத்தை பார்க்க ஆவலாக இருக்கேன்