36 வயதினிலே திரைப்படத்தை முன்வைத்து ‘இந்தியப்பண்பாட்டு விழுமியங்களைப் பாசாங்கு செய்வதன் அரசியல்’ உரையாடல்: கே.பாலமுருகன் – சு.தினகரன்- அ.பாண்டியன்- யோகி பகுதி-1

download (1)

36 வயதினிலே திரைப்படத்தை முன் வைத்து ‘இந்தியப்பண்பாட்டு விழுமியங்களைப் பாசாங்கு செய்வதன் அரசியல்’

உரையாடல்: கே.பாலமுருகன் – சு.தினகரன்- அ.பாண்டியன்- யோகி

எதை விமர்சனம் என்கிறோம்? தத்துவமோ உளவியலோ அரசியலோ தெரியாத ஓர் எளிய மனிதன் படம் தனக்கு புரியவில்லை; தன்னை மகிழ்ச்சிப்படுத்தவில்லை எனக் கூறுவதைச் சமூகம் உதாசினப்படுத்தி விடுகிறது. தத்துவப்பின்புலத்துடன் சினிமா அறிவுடனும் உளவியல், அறிவியல், சமூகவியல் பின்புலத்துடனும் திரைவிமர்சனம் செய்பவனையும் சமூகம் கண்டுகொள்ளாமல், அவன் விமர்சனமே புரியவில்லை என ஒதுக்கிவிடுகிறது. பிறகு எதைத்தான் விமர்சனம் என சமூகம் நம்பிவாசிக்கிறது எனக் கவனித்தால், முகநூல்‘ ஸ்டேட்டஸ்கள் தான்’  எனத் தெரியவருகிறது.  நாளெல்லாம் தார்ச்சாலையில் வேலையை முடித்துவிட்டு ஓரக்கடையில் ரொட்டிசானாய் சாப்பிட்டுவிட்டு, ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்கம் சென்றுபடம் பார்த்து தன் நேரத்தை வீணடித்த ஒரு சினிமாவைப்பற்றி தன் கருத்தைச் சொல்லும் எளியமனிதனுக்கு முகநூல்கணக்கு இருக்கும் என்பது உறுதியில்லை. எந்தப் பொறுப்புமில்லாமல் போகிற போக்கில் சினிமாக்களைப் பற்றி ஒரு மொக்கையான கருத்தை (ஸ்டேட்டஸ்ட்டுகள்) வெளியிடும் நிறைய முகநூல் அன்பர்கள்தான் இன்று கவனிக்கப்படுகிறார்கள்; அவர்களின் விமர்சனம்தான் கடுமையான வாசிப்பிற்க்குள்ளாகுகின்றது. சட்டென ஒரு பொது புத்தியை உருவாக்கிவிடுகிறது.

வெகுஜன சினிமாமாஸ் சினிமா என்கிற இரண்டிற்குமிடையே தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ்சினிமாவின் போக்கை முதலில் நாம் புரிந்து கொண்டால் 2000க்குப் பிறகு வெளிவரும் சினிமாக்களின் போதாமையை நம்மால் தீவிரமாக உரையாடமுடியும்.

ஒரு குறிபிட்ட பாரம்பரியத்துடன் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக வாழ்பவர்களை ‘மக்கள்’ எனப்புரிந்து கொள்ளலாம். வாழையடி வாழையாக அந்தக் குறிபிட்ட பிராந்தியத்தின் பாரம்பரியம், மீறப்படாமல் கட்டிக்காக்கப்படும். ஆனால், ‘மாஸ்’ என்பது தொழில்புரட்சியாலோ உலகமயமாக்கல் கொடுத்தபாதிப்பாலோ தன் வாழ்நிலத்திலிருந்து நகருக்கு உடலளவிலும் மனதளவிலும் நகர்ந்துவிட்ட சமூகத்தைக் குறிக்கின்றது. இவர்கள் தன் பண்பாட்டு வேர்களிலிருந்து துண்டிக்கப்பட்டு நகர்ந்து வந்திருப்பார்கள். ஆக, மாஸ் என்பதையும் மக்கள் என்பதையும் 1990களுக்குப் பிறகு நாம் வேறுமாதிரி கவனிக்க வேண்டியதுள்ளது. உலகம் சிறுசிறு சந்தைகளாகிப் போனவுடன் பெரும்பான்மையான  மக்கள் குறிப்பிட்ட பாரம்பரியங்களின்  அடையாளங்களிலிருந்து  வெளிவரத் துவங்கினார்கள்.

இன்றைய பல உலக சினிமாக்கள் நகர்ந்து விட்ட சமூகத்தின் விளைவுகளையும் அகசிக்கல்களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் காட்டிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் சினிமா இந்த நீரோட்டத்தில் எம்மாதிரியான படைப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் மேலும் தெளிவாகச் சிந்திக்க முடியும். பெரும்பான்மையான தமிழ் சினிமாமாஸ் சமூகத்தைத்தன் கதையின் மனிதர்களாகக் கொண்டிருந்தாலும் விட்டு வந்ததன் கலாச்சார விழுமியங்களை மீண்டும் கொண்டு வந்து நகர் வெளிக்குள் ஒரு மாய வேலியாகக்கட்டி அதனுள் எல்லாநியாயங்களையும் விழிப்பையும் பேசமுயலும் வேலைகளையே செய்துவருகின்றன. ஆக, மாஸ்சினிமா என்கிற தோரணையில் தமிழ்சினிமா ‘வெகுஜனபாசாங்குகளை’ உற்பத்தி செய்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. – கே.பாலமுருகன்

இனி உரையாடல்…

சு.தினகரன்: 36 வயதினிலே எப்படி இருந்தது?

கே.பாலமுருகன்: நிச்சயம் எளிய மனிதர்களை அதிகம் சிரமப்படுத்தாமல் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துயதோடு 36-vayathinile-songs (1)மட்டுமல்லாமல் கொஞ்சம் சிந்திக்கவும் வைத்திருக்கிறது. பெண்விடுதலை பற்றியார்யாரோ பேசிவிட்டார்கள். தீவிரமாகப்பேசியும் எழுதியும் வருகிறார்கள். அவர்களின் தீவிரத்தை எட்டமுடியாவிட்டாலும், தீவிரத்துப்பக்கமே அண்டாமல் வாழும் சமூகத்தின் பெரும்பான்மை பெண்களை இப்படம் இரசிக்கவைத்திருக்கும் என்றே நம்புகிறேன். நிச்சயம் இந்தப்படம் இந்தியப்பண்பாட்டு விழுமியங்களுக்கு ஒத்திசைக்கும் ஒரு கமர்சியல் சினிமாத்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும், ஆண்களை மட்டுமே கதாநாயகர்களாகக்காட்டி சலிப்பை உண்டாக்கிய தமிழ்சினிமாவில் திடீரென பெண்ணைமையப்படுத்தும் இப்படம் வெகுஜன கவனத்தைப் பெறுகிறது.

தினா: கவர்வதால் மட்டும் ஒரு படம் நல்ல படம் என்றாகிவிடுமா?

பாலமுருகன்: நல்லபடம் என்பதற்குப் பலர் பல மாதிரியான வியாக்கியானங்களைக் கொண்டிருக்கிறார்கள். மலையாள இயக்குனர் அடூர்கோபால கிருஷ்ணன்வணிகரீதியில் ஒருபடம் வெற்றியடைவதன் மூலம் அது நல்லபடம் ஆகிறது என்கிறார். அப்படியென்றால் வேலாயுதம் நல்லபடமாகிவிடும் அபாயம் இருக்கிறது அல்லவா? தீபக்மேத்தா அவர்கள் மக்களைப் பாதிக்காத சினிமா நல்ல சினிமா இல்லை என்கிறார். அப்படியென்றால் கொஞ்சமும் வெகுஜன சிந்தனைகளைப் பாதிக்காமல் சந்தையில் தோல்வியடைந்து காணாமல் போகும் எத்தனையோ நல்ல படங்களின் நிலை? கவர்வது என்பது ஒரு செயல்பாடு.

அ.பாண்டியன்: எளிய மனிதர்களை கணக்கில் கொண்டுத்தான் ஒரு சினிமாவைப் பற்றி விமர்சிக்கவேண்டுமா?

கே.பாலமுருகன்: எளிய மனிதர்கள்தான் இன்று சினிமாவை வெற்றிப் பெறவும் தோல்வியடையவும் செய்கிறார்கள். சினிமா ஏற்கனவே தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறு பகுதியினரை நோக்கி எடுக்கப்படுவதல்ல. ஒட்டு மொத்த சமூகத்திற்கும் சேர்த்துப் பாராபட்சமில்லாமல் அதன் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவேண்டும் என்றே நான் எப்பொழுதும் கருதுவேன். இது எளிய மனிதர்களுக்காக; இது சிந்திக்கும் வர்க்கத்திற்கு என பாகுபாடில்லாமல் யாராக இருந்தாலும் அவர்களைக் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டினால்; அவர்களின் மனத்தின் அடியாழத்தில் ஒளிந்திருக்கும் உணர்வுகளைத்தட்டி எழுப்பினால் அது நல்ல சினிமாவே என நினைக்கிறேன். அதற்காக, 36 வயதினிலே படத்தை நல்ல படம் என நான் சொல்லவரவில்லை. அது இந்த உரையாடலின் கடைசிப் பகுதி முடிவுசெய்யலாம்.

தினா: அப்படியென்றால் ஒரு சினிமா அரசியல் பிழையுடன்; தத்துவப்பிழைகளுடன் வெளியானால் என்ன நேரிடும்?

பாலமுருகன்: தத்துவமே படிக்காத, அரசியல் பற்றி எதையுமே  அங்கலாய்க்காமல் திரையரங்கம் செல்லும் எளிய மனிதனுக்கு அப்படம் ஒரு தவறான கற்பிதங்களை விதைக்க நினைத்தால் அது அந்தச்சினிமாவின் அயோக்கியத்தனம்.  நிச்சயம் ஒரு தீவிரவிமர்சகன் அதை அடையாளம் கண்டுசொல்வான். அந்த விமர்சனத்தைப் பற்றியும் கவலைப்படாத அந்தச் சினிமாவிலுள்ள அரசியல் பிழைகளையும் கண்டு கொள்ளாமல் சட்டென மறுநாள் வேலைக்குப் போய்விடும் எளிய மனிதனிடம் என்ன சொல்லப்போகிறோம்? அரசியல் பிழை, கருத்துப்பிழை என்பதெல்லாம் உங்களுக்கும் எனக்கும் தான் என்று நான் நினைக்கிறேன்.

தினா: 36 வயதினிலே படம் பெண்ணியத்தைத் தீவிரமாக உரையாட வாய்ப்பிருந்தும் அதனை அப்படம் மேற்கொள்ளவில்லை எனவிமர்சிக்கப்படுகிறதே?

யோகி: 36 வயதினிலே..  மலையாளத்தில் வெளிவந்த ‘how old are you’  படத்தைதான் நான் முதலில் பார்த்தேன். படம் சுவாரஸ்யமான படம்தான். தொடக்கத்திலிருந்தே 36வயது ஒத்த பெண்ணைச் சுற்றி அழகாக பின்னப்பட்ட கதை. ஆனால், இந்தக் கதையில் பெண்ணியம் பேசப்பட்டதா, பெண்ணிய வாதிகளுக்கான கதையா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், பெண்ணியவாதிகளும், வெகுஜன பெண்களும் இந்தப் படத்தைப் பார்க்கும் போது பேசுவதற்கு விஷயங்கள் இருக்கவே செய்கிறது. இந்த படத்தின் நாயகி கல்லூரி காலங்களில் குறிப்பிடதக்கவளாக இருக்கிறாள். திருமணத்திற்கு பிறகு, தன் இயல்பை தொலைத்தவளாகவும், கணவன், மகள் என அவர்களின் ஆதிக்கத்தை சுமப்பவளாகவும் மாறிபோகிறாள். பின், தனக்குள்ளே நொந்து கொள்கிறாள். பின் நெருங்கிய தோழி வருகிறார்.. நெற்றி கண்ணைத் திறந்து விடுகிறார். ஒரு வேளை அந்த தோழி வராமல் போயிருந்தால் இந்தக் கதை எப்படி நகர்ந்திருக்கும்?  மகள்கூட தன் தாயைக் குறைத்துதான் மதிப்பிடுகிறார். இப்படிதான் ‘ இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்திலும் காட்டப்படும். மனைவின் பெருமையை அறியாத கணவன், அம்மாவைக் குறைத்து மதிப்பிடும் மகள். இந்தப் படத்தில் எனக்கு பிடித்த காட்சி முகநூலில் நையாண்டிக்கு உட்படுத்தப்படும் காட்சிதான். எதார்த்தம் என்றுகூட சொல்லலாம்.  ‘இங்கிலிஸ் விங்கிலிங்’ ‘queen’ போன்ற படங்களுக்கும்  ’36வயதினிலே’ படத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. Queen படத்தை சிறைச்சாலையில் உள்ள பெண்களுக்கு காண்பிக்கப்பட்டதாக எங்கோ படித்தேன். என்னைக்கேட்டால் இந்த 3 படங்களும் பார்க்க வேண்டிய படம்கள்தான். சில பெண்களின் வாழ்க்கையை மாற்றலாம்.. குறைந்த பட்சம் சிந்திக்க வைக்கலாம்.

பாலமுருகன்: இலக்கிய வாசிப்பும் தேடலும் நம்மை படத்தைத் தீவரமாகச் சிந்திக்க வைக்கிறது; அப்படிச் சிந்திக்கத் தூண்டுகிறது. இந்தியப் பண்பாட்டு விழுமியங்களில் ஒன்றான குடும்பபாரம்பரியத்தை மீறாமல் எடுக்கப்பட்டிருந்தாலும் அப்படம் அதனளவில் இன்னும் வாசிக்கவும் சிந்திக்கவும் ஆரம்பிக்காத ஆணாதிக்கத்தில் ஊறிப்போய்க்கிடக்கும் இந்திய குடும்பங்களில் ஒளிந்திருக்கும் வசந்தியைப் போன்ற அடக்கப்பட்ட பெண்களைக் கொஞ்சம் நிமிரச் செய்கிறது. இப்படம் முன் வைக்கும் விவாதம் மிகத் தவறானதாக இருப்பினும் நம் பெண்களைச் சட்டென உசுப்பித்தள்ளுகிறது. நான் முன்பே சொன்னதைப் போல இது நிச்சயம்மாஸ் சினிமா அல்ல; மிகச் சாமர்த்தியமாகப் பண்பாட்டு விழுமியங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பெண் விடுதலையைப் பேசும் பாசாங்குடன் அனைத்துக் குறைகளையும் குற்றங்களையும் பெண்களின் தலையில் இறக்கிவிடுகிறது. ஆனால் அதனைப் பெண்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு இதற்கு முன் இது போன்ற சினிமாக்கள் எடுக்கப்பட்டதில்லைஎ ன்பதே குறைப்பாடு. திடீரென அத்திபூத்தாற் போலவரும் இது போன்ற படங்கள் எந்தத்தடையும் இல்லாமல் மக்களின் மனத்தில் இடம்பிடிக்கிறது. ஒரு திடீர்கிளர்ச்சி உருவாகிறது. பிறகு அதுபரவி ஓர் உணர்வுரீதியிலான அலைவரிசையைக்காட்டுகிறது. இப்பொழுது நீங்கள் அவர்களிடம் இப்படத்தின் அரசியலைப் பேசிப்பாருங்கள்; பயங்கரமாகத் தண்டிக்கப்படுவீர்கள்.

தினா: அப்படியென்றால் 36 வயதினிலே படம் பேசிய பெண்ணியமே போதும் என நினைக்கிறீர்களா?

கே.பாலமுருகன்:இப்படம் பெண்ணியம் பேசியதா என்பதிலேயே முதலில் சந்தேகங்கள் உண்டு. படம் பார்க்க தொடங்கியதிலிருந்தே இந்த நெருடல் என்னிடம் இருக்கின்றது. அதனைப் பாண்டியன் விரிவாகச்சொல்வார் எனஎதிர்ப்பார்க்கிறேன்.

அ.பாண்டியன்: பெண் சார்ந்த விடயங்களுக்கு சற்று கூடுதல் கவனம் கொடுத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் தமிழுக்கு முற்றிலும் புதியன அல்ல. கே.பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் அவள் ஒரு தொடர்கதை, கருத்தம்மா, போன்ற சில படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவை பெண்களை சட்டென தியாக செம்மல்களாகவும், புரட்சிப் பெண்களாகவும் ஐடியல் கதை மாந்தர்களாக காட்டுபவை. அவை சமுதாய பெண்களிடம் எதிர்ப்பார்ப்பது கரிசனத்தை மட்டுமே. அவற்றை பெண்ணிய படைப்புகள் என்று ஏற்க்க முடியாது. அதே போல், 36 வயதினிலே படம் பொதுவான பார்வையாளர் மத்தியில் ஆணாதிக்கம், பெண் சுதந்திரம் குறித்த மிக ஆரம்பகட்ட உரையாடல்களை தொடக்கிவைக்க கூடியது என்றாலும் இது பெண்களை தன் போக்குக்கு கட்டி மேய்க்கும் வேலையையே செய்கிறது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும்

கே.பாலமுருகன்:   ஆமாம். கழுத்தில் சங்கிலியிட்டு, அந்தச் சங்கிலிக்குக் கொஞ்சம் சாயம் பூசி, மேயும் வேலியைக் கொஞ்சம் பெரிதாக்கி இதுதான் பெண் விடுதலை என்பதைச் சொல்லும் ஒரு தொனி படத்தில் இருந்ததையும் சொல்லித்தான் ஆகவேண்டும். இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் இப்படம் பெண்ணியம் பேசவில்லைஎன்பதுதான். அதன் ஆழமான அரசியலின் வழி ஒரு பெண் அடிமை வாழ்க்கை வாழ அப்பெண் தான் காரணம் என சொல்ல முனைகிறது. இருப்பினும் நீங்கள் சொன்னதைப் போல இப்படத்தின் தவறான அரசியலை சாமான்ய பெண்கள் உணரப்போவதில்லை; ஆனால் அவர்களின் சுதந்திரம் குறித்து அவர்கள் சிந்திக்கத் துவங்குவார்கள் என்பது உறுதி. அதற்கான ஒரு தொடக்கம் இப்படம்.

அ.பாண்டியன்: இந்த படம் பற்றி பொதுவாக மக்களிடம் பேசும்போது (குறிப்பாக பெண்களிடம்) அவர்கள் தங்கள் கனவுகள் தாங்கள் ஏற்றுக் கொண்ட குடும்ப அமைப்பால் கலைக்கப்பட்டுவிட்டது என்பதை ஓரளவு ஏற்றுக் கொண்டாலும் அதற்கான காரணத்தை அறிய முடியாமல் இருப்பதைக் காணமுடிகிறது. 36 வயதினிலே காட்டும் சமுதாயம் மிக இனிய சமுதாயம். மாமனார், மாமியார், அணடை அயலார், அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள், பெரும் வியாபாரிகள், பணக்காரர்கள் இந்திய குடியரசு தலைவர் என அனைவரும் நல்லவர்கள். சாதாரண பெண்ணும் தன் கருத்தை நாடாளுமன்றம் வரை மிக எளிதாக கொண்டு செல்ல முடிகிறது. அனைத்து மட்ட அதிகாரங்களும் ஆளுக்கு வழி விடுகிறது. அதாவது இந்தியா சாமானிய மக்களை மிக அன்போடு பராமரிக்கிறது என்பதே இதன் பொருள். ஆக இவ்வளவு பரந்த மனப்பான்மை கொண்ட மண்ணில் பெண்கள் வீட்டுக்குள் தங்கள் கனவுகளைத் தொலைத்துவிடுவது ஏன்? அது யார் குற்றம்? ஆக 36 வயதினிலே காட்டும் நல்ல சமுதாயத்தில் ஒரு பெண் அடிமைப்பட்டு கிடக்கிறாள் என்றால் அதற்கு காரணம் நிச்சயம் அவளாகத்தானே இருக்க முடியும். தன் ஊக்கமின்மையாலும் மந்தகுணத்தாலும் அவள் அப்படி இருக்கிறாள் என்பதுதானே உண்மை. ஆனால் இது ஏற்புடையதா? சமுதாயமும் நாடும் அப்படித்தான் இருக்கிறதா? இந்திய பண்பாட்டில் பெண்களின் இடம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு இப்படத்தில் விடை தேடமுடியாது. குழந்தை கீழே விழுந்ததற்கு காரணம் கீழே கிடந்த கல் அல்ல அந்த குழந்தையின் கவனமின்னைமே காரணம் என்பது ஒரு சமாலிப்புதானே.

கே.பாலமுருகன்: பெண் குழைந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊட்டி கொன்ற கிராமங்கள் நிரம்பிய இந்தியாவின், சென்னையில் பார்க்கும் இடத்திலெல்லாம் நல்லவர்கள் உலா வருவது 36 வயதினிலே படம் கட்டமைக்க முயலும் புனைவுவெளி. அப்புனைவில் பெண் சோம்பல் நிறைந்தவளாகச் சித்தரிக்கப்பட்டு அவளே முயன்று அந்த சூழலிலிருந்து விடுப்படுவதாகக் காட்டுகிறது. அதுவும் அரசியல் பெண்களுக்குச் சாதகமாக இருக்கிறது எனக் கூற முனைவதே அபத்தம். குடும்பத்தைக் கட்டமைப்பது சமூகம் என்றால், சமூகத்தின் முதலாளி அரசு. சமூகத்தின் மூலம் பெண்களை ஒடுக்கும் அரசு எப்படி இப்படத்தில் இத்தனை இலகுவாகப் பெண்களுக்கு வழிவிடுகிறது?

சு.தினகரன்: குடும்பங்கள் நிறுவனங்களைப் போலத்தான் செயல்படுகின்றன. ஒரு சமூகத்தின் புனிதத்தைக்காக்க பெண்கள் எல்லைக்கோடுகளாக உருவாக்கப்படுகிறார்கள். இப்படம் அதனளவில் தான் பேச முனைந்த களத்தில் நேர்மையாக இல்லை என்பதே புலப்படுகிறது. பெண் மீது ஏறிக் கொண்டு அவளுடைய நியாயங்களைப் பேச, அவளையே குற்றவாளியாக்கிக் காட்டும் படம் என்றே குறிப்பிடலாம் போல.

அ.பாண்டியன்: ஆமாம், பெண் முயன்றால் போதும். அவள் முயற்சிகளுக்கு கைக்கொடுத்து தூக்கிவிட சமுதாயம் காத்திருக்கிறது. ஆகவே பெண்கள் தயக்கம் இன்றி தங்கள் கனவுகளை அடைய முயலவேண்டும் என்பது 36 வயதினிலே முன்வைக்கும் பரிந்துரை.

கே.பாலமுருகன்: 36 வயதினிலே படம் ஒரு கனவு காண்பதாக எடுத்துக்கொள்வோம். பெண்களின் எல்லா முயற்சிகளுக்கும் கைக்கொடுக்கும் ஒரு சமூகம் உருவாக வேண்டும் என்பதே அதன் கனவு. நிதர்சனம் அதற்கு முரணாக இருப்பினும், சினிமா ஒரு புனைவு வெளியை உருவாக்க முயல்கிறது. அப்புனைவு வெளியில் பெண்கள் குடும்பத்திற்க்காகவே உழைத்து உழைத்து தனக்கென ஒரு கனவில்லாத சோம்பேறிகளாக உருவாகிவிட்டார்கள். ஆகவே அவர்களின் கனவை அவர்கள் மெய்ப்பிக்க குடும்பம் வழிவிட வேண்டும்; நாடு வழிவிட வேண்டும்; சமூகம் உதவ வேண்டும்; பக்கத்து வீட்டுக்காரர்கள் தொடங்கி தெருவில் போகும் தாத்தாகூட, பெண் என்றால் இரங்கி வந்து கைக்கொடுக்க வேண்டும். காரணம் மத்தியத்தரப்பெண் என்பவள் ஒரு பல்வீனமான பிறவி. தன் கனவைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருப்பவள். ஆகவே தன் கனவை அடைய எத்தனிக்கிறாள். ஆகவே பெருந்தன்மையான சமூகமே, ஆண்களே வழிவிடுங்கள் என்பதான ஒரு தொனி எட்டிப் பார்க்கிறது.

அ.பாண்டியன்: ஆமாம் அப்படி சொல்லலாம்தான். ஆனால் இப்படம் அதைத் தாண்டி சமுதாயம் அப்படி உயரிய பண்புடன்தான் இருக்கிறது என்று கூறுவதுதான் நெருடல்.

கே.பாலமுருகன்: சினிமா இருவகையான மனநிலையில் இயங்குகிறது. ஒன்று கற்பனைவாதம் இன்னொன்று யதார்த்தவாதம். இதுவரை பெண்களின் நிலைப்பாடுகளை யதார்த்தமாகச் சொன்ன படங்கள் இல்லை என்றே நினைக்கிறேன். தங்களைப் பெருமிதமாகக் காட்டிக்கொள்ள பெண்கள் மீது இழிவுகளை ஏற்றி அதனைக் கடைசியில் விடுவிப்பதன் மூலம் சினிமா ஆண்வயம் எனக் காட்டிக்கொள்கிறது.

அ.பாண்டியன்: சூசன் வசந்தியிடம் நீ ஏன் இப்படி ஆகிவிட்டாய் என்று கேட்கும் கேள்விக்கு வசந்தியிடம் பதில் இல்லை. அவளுக்கே தெரியாமல் அவள் சுரண்டப்பட்டிருக்கிறாள். ஆனால் இப்படத்தில் அவளுக்குதெரியாதது அவளது மந்தபுத்தியின் விளைவு என்று காட்டுகிறது.

கே.பாலமுருகன்: சினிமா பெண்களைப் பற்றி பேசினாலும் அதனை ஆண்களின் குரலின் ஊடாகவே முன்வைக்கிறது. ஒரு முதிர்ச்சியான பெண் இயக்குனரால் ஒருவேளை இதனை உடைக்க முடியும் என நினைக்கிறேன்

கலை, இலக்கியம், சினிமா எனப் பெரும்பான்மையான வடிவங்கள் ஆண்வயப்பட்டு கால் நூற்றாண்டு ஆகிவிட்டதை நாம் மறக்க இயலாது. அதிலிருந்து தன்னை முற்றிலும் எதிர்த்து ஒலிக்கும் ஒரு காத்திரமான விவேகமான பெண்களின் நியாயங்களைப் பேசும் ஒரு சினிமா வந்திருப்பதாக நினைக்கிறீர்களா?

அ.பாண்டியன்: அவள் அப்படித்தான் என்ற ஒரு பழைய படம் சிறப்பாக பேசப்படுகிறது. நான் இன்னும் அதைப் பார்க்க வில்லை.இந்தியா, பெண்ணியம் பற்றிய விழிப்பு உள்ள நாடாக இருந்ததை வரலாற்றில் உணரலாம். ஆனால் கெட்டியான பண்பாடும் மத கோட்பாடுகளும் பெண்களை அடைத்து வைக்க துணைபோயின. ஆனால்,18 நூற்றாண்டுக்குப் பிறகு வந்த ஐரோப்பிய பெண்ணியத்தைப் பார்த்து இன்று இந்தியா மீண்டும் எழுச்சி பெற்று உள்ளதை சூசன் வசந்தி பாத்திரங்களின் வழி ஓரளவு காட்டியுள்ளார்கள். ஆயினும், இந்தியா விரும்புவது ஏற்பது வசந்தியைத்தான். சூசனை இல்லை.சூசனைப் பற்றி பேசத்தொடங்கினால் அது இந்திய மரபுக்கு எதிராக முடியலாம் என்ற அச்சத்தில் அவளைப்பற்றிய விளக்கம் படத்தில் முற்றாக தவிர்க்க பட்டிருக்கிறது.

சு.தினகரன்: ஆமாம். சூசன் மிக முக்கியமான பெண்ணியத்தின் குரல். ஆயினும் இப்படத்தில் ஒரு ஊறுகாயைப் போலவே தொட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறாள். இந்தியப்பண்பாட்டிலிருந்து பெண்ணியத்தைப் பழகிக் கொண்டதைப் போன்ற பெருமையின் அடையாளமாகக் கதைக்குள் வந்து போகிறாள்.

கே.பாலமுருகன்: ஐரோப்பிய சிந்தனை தாக்கங்கள் ஆசியா முழுவதும் பரவியதுதான். ஆனால், அது ஏற்கனவே அங்கிருக்கும் பண்பாடுகளைக் கொஞ்சமும் அசைக்கவில்லை. அதனால்தான் சூசன் கதாபாத்திரமும் பெரும் மயக்கத்தோடு ஓர்அசரீரியின் குரலைப் போல வந்துவிட்டு கரைகிறது.

அ.பாண்டியன்: ஆமாம் ஐம்பது விஷயங்களைப் பெண்கள் செய்யக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால், பெண்கள் தங்களுக்குப் பிடித்த 5 விஷயங்களை செய்ய விடமாட்டார்கள் என்று சூசன் சொல்வது மட்டும்தான் இப்படத்தில் உண்மையான பெண்குரல்.

கே.பாலமுருகன்: இப்படத்தில் வரும் கணவன் கதாபாத்திரத்தின் சில வசனங்களைத் தனியாக விவாதிக்கலாம். ‘என் மகளை இன்னொரு வசந்தியாக்க நான் விரும்பலை’ எனும் வசனத்தில் இந்திய பழைமை வாதத்திற்குள் அடங்கிப்போன ஒரு குடும்ப மக்காக என் மகளை ஆக்க நான் விரும்பவில்லை என்பதே அக்குரலில் எதிர்வினை. இது சட்டென பெண்களுக்கு எரிச்சலை உருவாக்கும் வசனம். அவர்களைச் சீண்டிப்பார்க்கும் வசனம்.

அ.பாண்டியன்: ஆண்களின் போக்கிற்கும் இப்படம் சற்றே சமாதானம் சொல்கிறது. ரகுமான் பேசும் வசனம் தன் வாழ்க்கை மொக்கையாக இருப்பது குறித்தஎதார்த்தமான சலிப்பு என்னை கவர்ந்தது. காலையில் இருந்து மாலை வரை வேலை செய்து, மதிய உணவையும் டப்பாவில் அடைத்துக் கொண்டுபோய்… என்று ஒரு வசனம் வருமே?

கே.பாலமுருகன்: ஆமாம், நடுத்தர வாழ்க்கையின் மீது அவனுக்கு உண்டாகும் பயங்க சலிப்பைப்படத்தில்உணரமுடிந்தது. அதிலிருந்து விடுபட தன் மனைவியின் மீது பழிப்போடவும், மனைவியைத் தனியாய் விட்டுபோகவும் அவனால்முடிகிறது.

அ.பாண்டியன்: இப்படி நழுவி ஓட ஆணுக்கு அதிகாரம் உண்டு, அல்லது அதிகாரத்தை அவன் பயன்படுத்திக் கொள்கிறான்.

கே.பாலமுருகன்: ஆண் எத்தனை சுயநலவாதியாய் நடந்து கொள்கிறான்என்பதற்கானநியாயமாக நடுத்தர வாழ்க்கைக் கொடுக்கும் சலிப்பைக் காட்டியிருக்கிறார்கள். அவன் தப்பிக்க ஒரு நியாயம்.ஆகவே, 36 வயதினிலே படம், இந்தியப் பண்பாட்டு விழுமியங்களை மீறாமல் பெண் விடுதலை பேசுவதைப்போலபாசாங்குசெய்திருக்கும் படம் என்கிற முடிவுக்கு வரலாம். அல்லது இந்திய பண்பாடு ஒரு பெண்ணை ஆகக் கடைசியாக ஒரு குடும்பத்திற்குள் வைத்துதான் ஏற்றுக்கொள்ளும் என்கிற சிந்தனைக்கும் வரலாம்.இரு வகையான சிந்தனையை நம்மிடம் விட்டுச் செல்கிறது படம்.

அ.பாண்டியன்: எனக்கு இப்படம் கொடுத்த தகவல்:

1. இந்தியப் பெண்கள் தங்கள் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் மீராதவரை எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் பறக்கலாம். (மிருகக்காட்சிசாலையில்மிகப்பெரிய கம்பி கூண்டுக்குள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சுற்றிவரும் கிளிகள் போல)

2. பாரம்பரியம் மீராத பெண்ணிய வளர்ச்சிக்கு நாடும் வீடும் மிகுந்த ஆதரவு தந்து தூக்கிவிட காத்திருக்கிறது. 3. பெண்கள் தங்கள் குடும்பத்துக்குள் சிக்கி தங்கள் கனவுகளைத் தொலைத்தற்கு நாட்டையும் சமுதாயத்தையும்பண்பாட்டு சிக்கல்களையும் காரணம் காட்டுதல் கூடாது, அது அவர்களின் சுயசிந்தனையையும் ஊக்கத்தையும் பொருத்தது. பெண்ணியம் பேசுவது என்பது உண்மையில் என்ன? பெண் தன் மனத்தளவில் சுதந்திரமாகவும் சுயமுடிவுகள் எடுக்கக் கூடியவளாகவும், தனக்கான கட்டுப்பாடுகளை தானே அமைத்துக் கொள்ளக் கூடியவளாகவும் இருப்பதுதானே? அந்த அம்சங்களை இப்படம் கொண்டுள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

கே.பாலமுருகன்: நிச்சயம் பேசவில்லை,பெண்ணியம் என்பதே இன்னமும் விவாதத்தில்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆணிடமிருந்து அடையும் விடுதலைத்தான் பெண் விடுதலையா?முதலில் பெண் என்பவளின் சுயம் குறித்த ஆழ்மன வெளிப்பாடுகள் முற்றிலுமாக அழுத்தப்பட்டிருக்கிறது. உளவியல் ரீதியில் காலம் காலமாக அவளுக்கென்று முடிவெடுக்கும் உரிமை இல்லை என நம்ப வைக்கப்பட்டிருக்கிறாள்.

அ.பாண்டியன்: அவள் செயல்பாடுகள் எந்த வழக்கங்களோடும் கொஞ்சமும்உரசாமல் மிக நேர்த்தியாக அழகாக இருப்பதால் அவை சிறந்த பெண்ணிய அடையாளங்கள் ஆகிவிடுமா?சுந்தந்திரமாக சிந்தித்து செயல்பட முனையும் எந்த ஆணும் பெண்ணும் கண்டிப்பாக பண்பாட்டு அம்சங்களோடும் மரபான வழக்கங்களோடும் முட்டி மோதவேண்டிய கட்டாயம் நேர்தே தீரும்.அவள் விவசாயம் செய்யாமல் தையல் வகுப்பு நடத்தி முன்னுக்கு வருவதாக காட்டினாலும், சாரி ஜாக்கேட்தான் தைத்தால் என்று கூறுவது என்ன வகை பெண்ணியம்?இன்று நாம் பெரியார் காலத்து பெண்ணியம் பேசுவது அர்த்தமற்று போய்விட்டது. அவர் காலத்தில் பெண்கள் படிக்கவேண்டும், வேலைக்கு செல்லவேண்டும் என்றெல்லாம் பேசப்பட்ட பெண்ணியம் இருந்தது. இன்று பல்கலைக்கழக மாணவர்களில் 80% பெண்கள்தான். வேலையிடங்களிலும்பெண்கள் பெருகிவிட்டார்கள். வேலைக்குப் போகாத பெண் என்பது இன்று சற்றே விசித்திரம். ஆக இன்றை பெண்ணியம் என்பது பெண்ணுக்கு உள்ள சுய உரிமை குறித்த பேச்சாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

சு.தினகரன்: ஆமாம். இன்றைய மக்கள் என்பவர்கள் காலம்காலமான பாரம்பரியத்தில் ஊறிப்போனவர்கள் அல்லர். அவர்கள் உலகமயமாக்கலால் நகர்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால், மனத்தைமட்டும் பண்பாட்டு விழுமியங்களுக்குள் பத்திரமாகவைக்க வேண்டும் என்பதையே இன்றும் கற்பனாவாத சமூகம் தொடர்ந்து அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

கே.பாலமுருகன்: பெரியார் காலம் என்பது ஒரு துவக்கம். ஆனால் அதன் நீட்சியான இன்றைய பெண்கள் சந்திக்கும் பிரச்சனை உலகமயமாக்கலுக்கு உட்பட்டது. 1980களிலேயே மலேசிய இந்தியப் பெண்கள் அதுவரை அவர்களை அடக்கிவைத்திருந்த வேலியைவிட்டு வெளிவரத்து வங்கிவிட்டார்கள். ஆனால், வெளியே வந்த பிறகு அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் என்பது இன்னொரு வடிவத்தை எடுத்தது. பாலியல்வன்முறைகள், வேலையிடத்து அதிகாரசுரண்டல்கள், சமூக மனத்தின் பகைமைகள் என நீண்டு கொண்டேபோயின.

சு.தினகரன்: இது போன்ற சினிமா உரையாடல்களின் மூலம் நம் முடைய வாசிப்பு, மதிப்பீடுகள், சமூகம், இலக்கியம் என விரிவாகப் பேச முடிகின்றது. விவாதிக்க வேண்டிய சினிமாவிற்காக இந்த உரையாடலை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி.

கே.பாலமுருகன்: நம் சினிமா இரசனைகளை, சினிமாவின் மீதான நம்பிக்கைகளை இது போன்ற உரையாடல்கள் மாற்றியமைக்கவும் வாய்ப்புண்டு. அடுத்தக்கட்ட தலைமுறையினர் தவறான ஒரு புரிதலுக்குள் ஆளாகாமல் தடுக்க உரையாடல்கள் சாத்தியமே. மீண்டும் சந்திப்போம். நன்றி பாண்டியன், தினகரன், யோகி.

எழுத்து: கே.பாலமுருகன்