தமிழ் சினிமா இதுவரை பார்க்காத சில காட்சிகள், அருவருப்பான பேரங்களை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு படம் வெளியாகி பெரும் லாபம் குவிக்கும்போது, அதை முழுவதுமாக அனுபவிப்பவர்கள் அதைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையிட்ட தியேட்டர்காரர்கள்தான். அட, இடையில் வரும் மீடியேட்டர்களுக்குக் கூட நல்ல லாபம்.
அப்போதெல்லாம் அந்த வெற்றிக்குக் காரணமான படத்தின் நாயகனுக்கோ அல்லது இயக்குநருக்கோ லாபத்தில் யாரும் பங்கு தருவதில்லை. கேட்டால் ‘இது யாவாரம்.. லாப நட்டம் சகஜம்’ எனத் தத்துவம் பேசுவார்கள்.
ஆனால் அதே படம், குறிப்பாக ரஜினி படம் சரியாகப் போகவில்லை என்றால், உடனே நஷ்டத்தை திருப்பிக் கொடுங்கள் என ரஜினியை நெருக்குகிறார்கள். இப்போது, அந்த ‘வியாபார எத்திக்ஸ்’ எங்கே போனதென்று தெரியவில்லை. எரியும் வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்ற கொடூர புத்தி.
‘உலகில் எந்த நாட்டு சினிமாவிலும் படத்தின் நஷ்டத்தை அதில் நடித்த ஹீரோ ஈடுகட்டியதாக கட்டுக் கதைகள் கூடக் கிடையாது. ஆனால் பாபா படத்துக்காக முதன் முதலில் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் நஷ்ட ஈடு கொடுத்தவர் ரஜினி. இத்தனைக்கும் அப்போது யாருமே அவரிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதி காத்தார்கள்.
ஆனால் நஷ்டம் என்ற முணுமுணுப்பு காதில் விழுந்ததால் அந்த நஷ்ட ஈட்டை முன்வைந்து கொடுத்தார் ரஜினி. அதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு இப்போது லிங்காவுக்கு ப்ளாக் மெயிலை விட மோசமான முறையில் நஷ்ட ஈடு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அநாகரீகத்தின் உச்சம் மட்டுமல்ல, மிக மோசடியானது,” என்கிறார் அனுபவசாலி விநியோகஸ்தர் ஒருவர்.
ரஜினி படங்கள் மூலம் பல கோடிகள் லாபம் பார்த்தவர் இவர். எல்லாவற்றையும் விட கொடுமை, இப்படி கேவலமான முறையில் நஷ்ட ஈடு கேட்டவர்களுக்கும் ரூ 12.50 கோடி வரை நஷ்ட ஈட்டுத் தொகை கொடுத்துள்ளார் ரஜினி. அந்தத் தொகையை ஒழுங்காகப் பிரித்துக் கொள்ளக் கூட முடியாத இவர்கள், இப்போது மீண்டும் நஷ்டஈட்டுப் புராணத்தை ஆரம்பித்துள்ளனர்.
பேராசை என்ற கொடிய வியாதிக்கு மருந்துமில்லை.. தீர்வுமில்லை. லிங்கா விநியோகஸ்தர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரின் பேராசை இன்று தமிழ் சினிமாவையே கேவலமாக்கிக் கொண்டிருக்கிறது. ரஜினி என்ற பெரும் கலைஞனை இந்த நஷ்ட ஈடு என்ற ஒற்றைச் சொல்லைக் கொண்டு மிரட்டப் பார்க்கிறார்கள். லிங்காவில் உண்மையிலேயே நஷ்டம் ஏற்பட்டிருந்தால், அடுத்த ரஜினி படம் வெளியாகும்போது, அதை வாங்கி விநியோகித்து லாபம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்றுதானே உண்மையான விநியோகஸ்தர்கள் முயற்சிப்பார்கள்.
ஆனால் இந்த ப்ளாக்மெயில் கோஷ்டி என்ன கேட்கிறது பாருங்கள்… ‘ரஜினி இன்னாருக்குதான் படம் செய்ய வேண்டும்… அந்தப் படத்துக்கு நாங்களும் பங்குதாரர்களாவோம்.. நஷ்டத்தைச் சரி கட்டிக் கொள்வோம். இல்லாவிட்டால், இன்னொரு பதினைந்து கோடி ரூபாய் அவர் தரவேண்டும்’!
வழிப்பறி, பகல் கொள்ளை போன்ற வார்த்தைகளையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது இந்த ‘லிங்கா நஷ்ட ஈடு’ என்ற வார்த்தை! ‘ரஜினி யாருக்கு கால்ஷீட் தர வேண்டும், யார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் நிர்பந்திக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுவும் எழுத்துப் பூர்வ ஒப்பந்தமே இல்லாத நிலையில், அவரை நேரில் கூடப் பார்த்திராத இந்த கூட்டம் அவருக்கு நெருக்கடி தருவது சட்டவிரோதமல்லவா…
ரஜினி நினைத்தால் இந்த கூட்டம் மொத்தமும் கம்பி எண்ண வேண்டி வரும். ஆனால் அவர் என்றைக்குமே அந்த தீவிர நடவடிக்கையை எடுக்க நினைப்பதில்லை.. அவரது கருணை மனசை காசாக்கப் பார்க்கிறார்கள்,” என்கிறார் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் ஒருவர்.
இத்தனைக்கும் லிங்கா பிரச்சினை முடிந்துவிட்டது.. இனி எந்தப் பிரச்சினையும் செய்ய மாட்டோம் என்று ஒப்பந்தம் போட்டு, அதை கலைப்புலி தாணு கையால் பெற்றுக் கொண்டு, போட்டோவுக்கும் போஸ் கொடுத்த சிங்காரவேலன் என்ற நபர், மீண்டும் மீண்டும் இந்த லிங்கா பிரச்சினையைக் கிளப்புவது திட்டமிட்ட திருட்டுத்தனம் என்கிறார்கள் அவருடன் இருக்கும் சக விநியோகஸ்தர்களில் சிலர்.
தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், ஃபெப்சி என வலுவான அமைப்புகளைக் கொண்ட தமிழ் சினிமா, இந்த மாதிரி ப்ளாக்மெயில் வர்த்தகத்தை எப்படி மவுனமாக வேடிக்கைப் பார்க்கிறது? என அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு இப்போது சாட்டையை கையிலெடுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த மோசடி வர்த்தகத்துக்கு அவர் காலத்திலாவது முடிவு வருமா.. பார்க்கலாம்!
செம்பருத்திக்கு நன்றி ,இதுதான் நடக்கிறது இப்பொழுது ,,தமிழராக பிறந்த நாம் பண்புடையவர்களாக இருக்க வேண்டும் ,அந்த கன்னட காரன் தமிழனுக்கு ஒண்ணுமே செய்யவில்லை என்று சொல்லுகூடாது ,நம் வீடு தேடி வந்தவரை நாம் என்ன செய்தோம் ,நம்மை தேடி வந்தவர்களை நாம் தானாதரிக்க வேண்டும் எந்த பலனும் எதிர்ப்பார்க்காமல் ,இந்த கன்னட காரனை வைத்து ,தமிழ் தயாரிப்பாளர்கள் கோடோ கொடியாக சம்பாரித்து விட்டார்கள் சம்பாரிதுக்கொண்டும் இருகீரார்கல் .mgr ரம் கூட பிறர் நஷ்டத்தில் பங்கு கொண்டவர் ,தேங்காய் சீனிவாசன் பணப்பிரச்சனையில் இருக்கும் பொது mgr அவர்கள் அவருக்காக படம் நடித்து கொடுத்து வாழ வைத்தவர் ,,