புத்தனின் சிரிப்பு

butthaninவிவசாய படிப்பை முடித்து விட்டு சொந்த நிலத்தில் விவசாயம் செய்து நம் நாட்டை விவசாயத்தில் முதலிடம் கொண்டு வருவதை லட்சியமாகக் கொண்டு இருக்கிறான் ஒரு இளைஞன்.

என்ஜினீயரிங் முடித்து விட்டு நாட்டில் இருக்கும் குப்பை அகற்றும் நவீன இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து அதை மேலிடத்தின் ஒப்புதலுடன் செயல்படுத்தி நாட்டில் உள்ள குப்பைகளை எல்லாம் அகற்றி ஒரு தூய்மை நாடாக உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் வாழ்ந்து வரும் மற்றொரு இளைஞன்.

நாட்டில் தலைவிரித்து ஆடும் லஞ்ச- லாவண்யங்களை ஒழித்து ஊழலற்ற நாடாக மாற்ற வேண்டுமென்ற துடிப்போடு இருந்து வரும் சி.பி.ஐ அதிகாரி ஒருவர்.

இவர்கள் மூன்று பேருக்கும் அவர்களுடைய கனவு லட்சியம் ஆகியவற்றை நிறைவேற்ற ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து மூவரும் தங்கள் லட்சிய கனவை அடைந்தார்களா? இல்லையா? என்பதே புத்தனின் சிரிப்பு.

விவசாயத்தில் நாட்டை முன்னேற்ற துடிக்கும் இளைஞனாக வரும் மகேஷ், ஒரு கிராமத்து இளைஞனாக மனதில் எளிதாக பதிகிறார். தனக்கு லோன் கொடுக்க முடியாது என்று கூறும் வங்கி அதிகாரியிடம் உலக நடப்புகளை ஆக்ரோஷமாக கூறும் இடங்களில் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ஆனால் காதலியை தனிமையில் சந்தித்து பேசுமிடத்தில் கூட இது மாதிரி உலக நடப்புகளை அவளிடம் கூறுவது அவளுக்கு மட்டுமல்ல நமக்குமே போரடிக்கிறது.

மகேஷின் காதலியாக வரும் மித்ராகுரியன் அழகு பதுமையாக வந்து இருக்கிறார். நடிப்பும் ஓகேதான். என்ஜினீயரிங் பட்டதாரியாக வரும் சுரேஷ் சக்காரியாவின் கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவரை தேர்வு செய்திருக்கலாம். அவருக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை. தயாரிப்பாளர் என்பதால்தான் இவரை இயக்குனர் தேர்வு செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

சிபிஐ அதிகாரியாக வரும் சமுத்திரகனி, ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மத்திய மந்திரியிடம் இவர் பேசும் வசனங்கள் எல்லாம அனல் பறக்கிறது.

விவேக், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவையுடன் ஒரு கருத்தையும் பதிவு செய்யும் விதமாக இந்தப் படத்தில் காமெடி பண்ணியிருக்கிறார். அவருக்கு செல் முருகனும் உதவி செய்திருக்கிறார்.

இயக்குனர் விக்டர் டேவிட்சன், நாட்டில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டும் விதமாக ஒரு படத்தை கொடுக்க முன்வந்திருக்கிறார். அதே நேரத்தில், உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்களின் வாழ்க்கையையும் அழுத்தமான பதிவு செய்திருக்கிறார். ஆனால் படம் முழுக்க ஒரே சமூக கருத்தை வலியுத்தியே காட்சிகள் வைத்திருப்பதால் படம் வேகம் பிடிக்க மறுக்கிறது.

அலிமிர்ஷா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பரவாயில்லை. யோகேஷ் ஒளிப்பதிவு, அசுத்தமடைந்து கிடக்கும் இந்தியாவை அழகாக படமாக்கியிருக்கிறது.

மொத்தத்தில் ‘புத்தனின் சிரிப்பு’ அக்கறை வேண்டும்.

-http://cinema.maalaimalar.com