சைக்கோ… சேடிஸ்ட்… ‘எலி’ விமரிசகர்கள் மீது வடிவேலு சாடல்!

தான் நடித்துள்ள எலி படத்தை தவறான, தீய எண்ணத்துடன் எழுதுகிறார்கள். எந்தப் படத்தையும் பார்க்காமல் எழுதாதீர்கள் என்று எலி படத்தை விமரிசனம் செய்தவர்களை நடிகர் வடிவேலு சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வீடியோ மூலமாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘நான் நடித்த எலி படத்தை அமோகமாக வெற்றியடைய வைத்த ரசிகர்களுக்கு கோடானு கோடி நன்றி. எத்தனையோ படங்களில் காமெடி செய்துள்ளேன். நடுவில் சில படங்களில் நடிக்காதபோது ஏன் நடிக்கவில்லை என்று மக்கள் கேள்வி கேட்பார்கள். நீங்கள் எந்தளவுக்கு என் காமெடியை ரசிக்கிறீர்கள் என்பதை எலி படம் மூலமாகத் தெரிந்துகொண்டேன். யாருக்கும் தெரியாமல் திரையரங்குகளுக்குச் சென்று பார்த்தேன். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எந்தளவுக்கு எலி படத்தை ரசித்துப் பார்க்கிறார்கள் என்பதை நேரில் பார்த்து கண்ணீர் வந்துவிட்டது. கண் கலங்கி அழுதுவிட்டேன்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், என் ரசிகர். மக்கள் ரசிக்கும் கூட்டத்தில் இருந்து வந்து படம் தயாரித்துள்ளார். கஷ்டப்பட்டதற்கான பலன் இன்று கிடைத்துள்ளது. இதை வெற்றிப் படமாக்கியதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தப் படத்துக்கு நல்லதாகவும் விமரிசனம் எழுதியுள்ளார்கள். அவை உண்மையாக உள்ளன. நல்ல, சிறந்த பத்திரிகைகள் இந்தப் படத்தை நன்றாகப் பாராட்டியுள்ளன. இணையத்தளங்களிலும் பாராட்டியுள்ளார்கள். சிலர் இந்தப் படத்தைத் தப்புத் தப்பாக, தீய எண்ணத்துடன் எழுதியுள்ளார்கள். அவர்கள் யார் என்று தெரியவில்லை.

எழுதுங்கள். இந்தப் படம் மட்டுமல்ல, எந்தப் படத்தையும் பார்க்காமல் எழுதாதீர்கள். பார்த்துவிட்டு எழுதுங்கள். படம் பார்த்துமுடித்து, உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லையென்றால், ரசிகர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று யாரிடமாவது கேட்டுவிட்டு எழுதுங்கள். நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களும் இந்தப் படத்தின் நகைச்சுவையை நன்கு ரசித்துள்ளார்கள். 85 வயது பெரியவர்களும் ரசிக்கிறார்கள். இந்தப் படத்தைக் கெடுப்பதற்கென்று சில விஷயங்கள் நடந்துள்ளன. எல்லாத் திரைப்படங்களும் போராடித்தான் வெளிவருகின்றன. அந்தப் படங்களைச் சாதாரணமாக, கேவலமாக விமரிசனம் செய்வதால், அதில் சிலருக்கு சின்ன சந்தோஷம் கிடைக்கிறது.

இணையத்தளங்களில் ஒன்றிரண்டு விமரிசனங்களைப் பார்த்தேன். ஒரு விமரிசனத்தைப் படித்தபோது எழுதியவரை எலி கடித்ததோ என்று எண்ணத் தோன்றியது.

எனக்கு ரசிகர்களின் ஆதரவு உள்ளது. ஆண்டவனின் அனுக்கிரகம் உள்ளது. நகைச்சுவை நடிகராக இருந்து இன்னும் எல்லோரையும் சந்தோஷப்படுத்துவேன். கெட்ட விமரிசனத்துக்கு மட்டும் யாரும் தலைவணங்கிவிடவேண்டாம். பலரும் உழைப்பை ரத்தம் சிந்தி ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறார்கள்.

நிறைய பேரு சைக்கோவா, சேடிஸ்டா என்னவென்று தெரியவில்லை. தீய்ந்த எண்ணத்துடன் திரைப்படங்களை அதுவும் எலி படத்தைப் பற்றி இணையத்தளங்களில் தவறாக எழுதுகிறார்கள். நல்ல விமரிசனங்கள் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. சிகரெட்டின் தீயவிளைவுகளை நகைச்சுவையுடன் படத்தில் சொல்லியிருக்கிறோம். இந்தப் படத்தை இளைஞர்கள் அவசியம் பார்க்கவேண்டும். இந்தப் படத்தைப் பார்த்து சந்தோஷமாக இருங்கள்’ என்றார்.

-dinamani.com