ஜாதியை தூண்டும் படங்களை எடுக்க மாட்டேன்

ஜாதியை தூண்டும் படங்களை எடுக்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற “த்ரிஷ்யம்’ என்ற திரைப்படம் தமிழில் “பாபநாசம்’ என்ற பெயரில் “ரீமேக்’ ஆகி இருக்கிறது. இதில் கமல்ஹாசன், கௌதமி, கலாபவன் மணி, சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இந்தப் படம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) வெளியாகவுள்ளது.

இது குறித்து கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“மோகன்லால் நடித்த ஒரு நல்ல படம், தானாகத் தேடி வந்தது. சில நல்ல வாய்ப்புகள் அப்படி வரும். அந்த ஒரு நல்ல படத்தை என் மக்களுக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பாபநாசம் படம் வெளியாகும். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழி படங்கள் இப்படத்தின் வெற்றியை நிரூபித்திருக்கிறது.

சினிமாவில் சில விஷயங்களை வெளியில் இருப்பவர்கள் கூறும் போதுதான் எனக்கு தெரிந்தது. ஏழை படும் பாடு படத்தின் பாதிப்பு வெகுவாக மகாநதியில் இருக்கும்.

அந்தப் படத்தின் சாராம்சத்தைக் கொண்டு மகாநதி ஆக மாற்றினேன். ஒரு தனி மனித வாழ்க்கை எப்படி சிதைந்து மீண்டும் எப்படி ஒன்றுபடுகிறது என்பது தான் படத்தின் களம். நான் எடுக்கும் போது பாத்திரங்களுக்கு நதி பெயரை வைத்து மாற்றினேன்.

மகாநதியும், பாபநாசமும்: பாபநாசம் புகைப்படங்களைப் பார்த்து விட்டு மகாநதி மாதிரி இருக்கிறது என்கிறார்கள். அதை நான் மறுக்கிறேன். அது ஒரு மாதிரியான நோக்கு. இது வேறு விதமான நோக்கு. வேட்டி கட்டி ஒரு படத்தில் நடித்து விட்டால், வேட்டி கட்டுகிற படம் எல்லாம் அந்தப் படம் ஆகிவிடாது.

என் குடும்பத்தின் தலைவனாக நான் நினைத்ததில்லை. ஆனால், என் குடும்பத்தின் தலைவன், தொண்டன் இரண்டுமே நான்தான். நேரம் காலங்கள் பொறுப்பை மாற்றி கொடுக்க வேண்டியதிருக்கும். இப்படத்தை பாபநாசத்தில் எடுக்க வேண்டும் என தோன்றியதால் எடுத்தோம்.

என்னுடைய தனி மனித விமர்சனம் எனது படங்களில் இழையோடுமே தவிர, பாத்திரத்தை போட்டு அமுக்கி விடாது. எனக்கென ஒரு சில கொள்கைகள் இருக்கின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜாதியைப் போற்றும் ஒரு படத்தில் நடிக்க மாட்டேன்.

ஜாதியைப் போற்றுவது போல் தலைப்பு இருந்தால் கூட, என்றைக்கு இந்தச் ஜாதியை விட்டு தொலையப் போகிறீர்கள் என்று உள்கருத்து இருக்கும். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி இறந்து விட்டார். ஆனால், “”இன்னும் என்ன ஜாதி?” என்ற பதம் வந்து கொண்டேதான் இருக்கிறது.

படத்தின் வெற்றிக்கு காரணம்… பாபநாசம் என்கிற பெயர் இந்திய கலாசாரத்தில் இருக்கிற ஒரு பெயர். நாசிக் என்ற ஊரின் முழுப்பெயர் பாபநாசிக் என்பது தான். சில விஷயங்களை நான் நம்புகிறேனோ இல்லையோ, அதை அவமதிக்க மாட்டேன்.

ஆனால், எனக்கோ, என் மகளுக்கோ, என் மக்களுக்கோ இடையூறாக இருக்கும் என்றால் போர்க்கருவி தானாக என் கையில் வந்து நிற்கும். ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணம் கதைக் கரு மட்டுமல்ல. குறித்த தேதியில் வெளியாகி இருக்க வேண்டியதும் அதை எத்தனை திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்பது தான் ஒரு படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது என்றார் கமல்ஹாசன்.

-http://www.dinamani.com