சினிமாவில் தமிழ் மொழியை தெளிவாகப் பேசுங்கள்! – பாரதிராஜா

barathirajaaதமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. ஆனால் சினிமாவில் தமிழ் மொழியை தெளிவாகப் பேச முயற்சிப்பதில்லை என்றார் இயக்குநர் பாரதிராஜா. பாபி சிம்ஹா நடித்துள்ள உறுமீன் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன், கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் சார்லி, பாபி சிம்ஹா, கலையரசன் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் பாரதிராஜா ஆடியோ மற்றும் ட்ரைலரை வெளியிட்டுப் பேசுகையில், “நான் மூன்று தலைமுறை கலைஞர்களை பார்த்து விட்டேன். பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி இப்போது வரைக்கும் உள்ள தலைமுறை வரைக்கும் பார்ப்பது என்பதும் மகிழ்ச்சிதான்.

இன்றைக்கு தமிழ் சினிமா அசாதாரண வளர்ச்சி கண்டுள்ளது. அந்த நாட்களில் 10 தயாரிப்பாளர்கள் இருப்பார்கள். இப்போது 100 தயாரிப்பாளர்கள், 200 இயக்குநர்கள், ஆண்டுக்கு 300 படங்கள் என்று தமிழ் சினிமா வளர்ச்சி புதிய பரிமாணம் தொட்டிருக்கிறது. இது தேவையானதும்கூட.

சில படங்களை பார்க்கும்போது அதிலுள்ள வசன உச்சரிப்பு படத்தை பார்க்கும் ஆசையை தூண்டுவதில்லை. இன்னும் பெரிய உயரத்துக்கு தமிழ் சினிமா போக வேண்டும். அதே நேரத்தில் தமிழ் படம் தனித்துத் தெரிய வேண்டும்.

இந்த மண்ணின், மொழியின் அடையாளங்கள் அதில் இருக்க வேண்டும். இது தமிழ் கலாச்சாரப் படம் என்பதை அடையாளப்படுத்த வேண்டும். இந்திய சினிமாவில் தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமாதான் உயர்ந்து நிற்கிறது. அதே நேரம் படத்தில் தமிழ் மொழியை தெளிவாக உச்சரிக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம்,” என்றார்.

tamil.filmibeat.com