வேறுபாட்டை கண்முன் காட்டியிருக்கிறார் கமல்: ஜெயமோகன்

இயக்குநர் ஜித்து தொட்டதெல்லாம் வெற்றியாக்கிய மலையாள இயக்குநர். தமிழில் அவர் தொடர்ந்து இயக்குவார் என நினைக்கிறேன் என்று பாபநாசம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.

பாபநாசம் படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். இந்தப் படம் குறித்து அவர் தனது இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:

பாபநாசம் நேற்றே இங்கு அமெரிக்காவில் வெளியாகிவிடும். அதைப்பற்றி ஒரு பதைப்பு எனக்கு இருந்தபடியே இருந்தது. ஆகவே அதைப்பற்றிய செய்திகளை தொடர்ந்து நோக்கவில்லை. நேற்று மாலை நியூஜெர்சி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி முடித்து விருந்தும் உரையாடல்களும் கடந்து நள்ளிரவில் நண்பர் அரவிந்தன் கன்னையன் அவர்களின்வீடு திரும்பியபின்புதான் இணையத்தில் எதிர்வினைகளைப் பார்த்தேன். கமலுக்கும் சுகாவுக்கும் ஜித்துவுக்கும் மின்னஞ்சல் அனுப்பிவிட்டு நிறைவுடன் தூங்கப்போனேன்.

பாபநாசம் ஜித்து ஜோசப் மற்றும் கமல் ஆகியோரின் படம். அதில் என் இடம் பெரியதல்ல. பெரும்பாலும் மூலத்தை ஒட்டியே தமிழ்வடிவம் உள்ளது. என் பங்களிப்பு என்பது அதை தமிழ்ச்சூழலுக்கு மாற்றியது. எனக்கு தெரிந்த வாழ்க்கையான தெற்கத்திச்சூழலுக்குக் கொண்டுசென்றேன். நாடார் பின்னணியை அளித்தேன். சிகரெட் அட்டையில் கணக்கெழுதுவது, தினதந்திக்குமான உறவு போன்ற நுண்தகவல்கள் சிலவற்றை அளித்தேன். திரைக்கதையின் அமைப்பில் சில சிறிய திருத்தங்கள் செய்தேன். அதற்கான வசனங்களை எழுதினேன்.

வசனங்களில் மென்மையான நகைச்சுவை, உள்ளடங்கிய சிரிப்பு இருந்தது. பொதுவாக அது தமிழ்ச்சூழலில் கவனிக்கப்படாது போகும் என்ற அச்சம் எப்போதும் திரையிலகில் உண்டு. நேற்றுவரை நான் அஞ்சிக்கொண்டிருந்ததும் அதற்காகவே. இன்று பரவலாக அனைவருக்கும் அது பிடித்திருப்பது தெரிகிறது. அது நிறைவளிக்கிறது, நம்பிக்கையையும் கொடுக்கிறது.

நெல்லைமொழி அல்ல இதிலுள்ளது. உவரி பகுதியின் மொழி. அதைக் கொண்டுவர நண்பர் சுகா அளித்த பங்களிப்பு மிகமிக முக்கியமானது. உச்சரிப்பை மட்டுமல்லாது நடிப்புக்கான உடல்மொழியையும் அவரே கொண்டுவந்தார். இந்தப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையவேண்டுமென விழைகிறேன். பாலுமகேந்திராவின் மூத்த மாணவர்களில் ஒருவர் அவர். அவரது இளையவர்கள் சினிமாவில் சாதித்தபின்னரும் திரைத்துறையின் சற்றுதாமதமாகவே அவருக்கு வாயில் திறந்திருக்கிறது.

பாலுமகேந்திரா ‘பள்ளி’ என ஒன்று உண்டு. காட்சிவடிவ பிம்பங்களை விட நடிப்புக்கு அதிக கவனம் அளிப்பது அது. நடிப்பின் நுண்மைகளை முன்வத்து அதன்வழியாக மென்மையான எளிமையான நிகழ்வுகள் வழியாக ஒரு வாழ்க்கையைச் சொல்வது. பாலுவைப்போலவே அமைதியானது அந்த அழகியல். பாலுமகேந்திராவின் மாணவர்கள் பலர் திரையில் பெருவெற்றி பெற்றிருந்தாலும் அவர்களின் அழகியல் வேறுவகையானதாகவே இருந்தது. பாலுமகேந்திரா பாணி அனேகமாக இன்று திரையில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

சுகா அந்த அழகியலை மிகவெற்றிகரமாக முன்னெடுக்கக்கூடிய ஆற்றல்கொண்டவர். இன்று அவரிடமிருக்கும் சில திரைக்கதைக் கருக்கள் மிகச்சிறந்த திரைப்படங்களாக ஆகக்கூடியவை.அவற்றை நாங்கள் விரிவாகவே விவாதித்திருக்கிறோம். பாபநாசம் படப்பிடிப்பிலும் அவற்றைப்பற்றியே பேசினோம். இனி வரும் வாய்ப்புகள் வழியாக அவர் பாலுவின் மென்மையான திரைப்போக்கை மீண்டும் தொடங்கி ஒரு ‘டிரெண்ட் செட்டர்’ ஆக முடியுமென நினைக்கிறேன்.

மற்றபடி இது கமலின் ஏராளமான வெற்றிப்படங்களில் ஒன்று. மோகன்லாலின் ஜார்ஜ்குட்டி அமைதியும் இறுக்கமும் கொண்ட மலையோரக் கிறித்தவர். சுயம்புலிங்கம் தானாக முளைத்துவரும் நாடார்வணிகர். நட்பும் நகைச்சுவையும் கொண்ட , உணர்ச்சிகரமான எளியமனிதர். அந்த வேறுபாட்டை அவர் கண்முன் காட்டியிருக்கிறார். ஜித்து தொட்டதெல்லாம் வெற்றியாக்கிய மலையாள இயக்குநர். தமிழில் அவர் தொடர்ந்து இயக்குவார் என நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

-http://www.dinamani.com