சென்னை: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன், கவுதமி நடித்துள்ள படம், ‘பாபநாசம்’. இதன் வெற்றிவிழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது கமல்ஹாசன் பேசியதாவது: இதை வெற்றிவிழா என்பதை விட, நன்றி அறிவிப்பு விழா என்று சொல்லலாம். 40 நாட்களில் திட்டமிட்டபடி ஷூட்டிங்கை முடித்தாலே அது வெற்றிப் படம்தான். ‘பாபநாசம்’ போன்ற படங்களுக்கு ஆதரவு கொடுத்திருப்பது திருப்தி அளித்துள்ளது. நல்ல படத்தை தூக்கிப் பிடியுங்கள். அப்போதுதான் நல்ல படங்கள் வரும்.
மலையாள ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று மோகன்லால் சொன்னதாக அறிந்தேன். அவர் நம்பிக்கையுள்ள கலைஞன். அவரது பெருந்தன்மைக்கும், பரிந்துரைக்கும் நன்றி. சில படங்கள் காலம் கடந்துதான் கொண்டாடப்படும். இணையதளங்களில் பல பழைய படங்களைக் குறிப்பிட்டு பாராட்டியிருப்பார்கள். இதை அப்போதே செய்திருந்தால், ஒருவேளை அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்திருப்பார்கள்.
சினிமாவுக்கு மொழி கிடையாது. திறமையைத்தான் பார்க்க வேண்டும். சாதி, மதம், மொழி எல்லாவற்றையும் கடந்ததுதான் சினிமா. எனக்குப் பெயர் நடிகன். உலக நாயகன் என்ற பட்டத்தை ரசிகர்கள் கொடுத் திருக்கிறார்கள். அந்தப் பட்டத்தில் எனக்கு சந்தோஷம் இல்லை. அது ரசிகர்களின் சந்தோஷம். ‘பாபநாசம்’ படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் தரப்பில் சொல்லும் விஷயங்கள் நியாயமாகத்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். கவுதமி, ஸ்ரீப்ரியா உட்பட படத்தில் நடித்த தொழில்நுட்பக் கலைஞர்கள் உடனிருந்தனர்.